தினகரன் 06.08.2010
மும்பை மாநகராட்சியில் குப்பையில் ரூ.2,600 கோடி ஊழல் ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்
தேவ்னார், ஆக.6: குப்பையில் ரூ.2,600 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது தகவல் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ.) மூலம் அம்பலமாகி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை கிழக்கு புறநகரில் உள்ளது தேவ்னார். இந்த பகுதியில் 132 எக்டேரில் குப்பை கொட்டும் கிடங்கு உள்ளது. மும்பையின் பல்வேறு பகுதிகளில் தினமும் சேரும் சுமார் 4,000 டன் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்படுகின்றன. குப்பை மற்றும் கழிவுகளை பிராசஸ் செய்து உரமாக மாற்றினால் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கும்.
உரம் தயாரிக்க மூலப் பொருளாக இருக்கும் குப்பைகளை, கட்டணம் வாங்காமல் பிராசஸ் செய்ய பல நிறுவனங்கள் முன்வந்தன. அவற்றை நிராகரித்த மாநகராட்சி, பணம் கொடுத்து குப்பைகளை பிராசஸ் செய்ய வேறொரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்மூலம் ரூ.2,600 கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த திடுக்கிடும் தகவல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
குப்பைகளை தினமும் பிராசஸ் செய்ய, யுனைடெட் பாஸ்பரஸ் லிமிடெட் நிறுவனத்தை கடந்த 2009 ஜூலை மாதம் ஒப்பந்தம் மூலம் நியமித்தது மாநகராட்சி. இந்நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு தினமும் 2,000 டன் குப்பைகளை பிராசஸ் செய்ய வேண்டும். இதற்காக ஒரு டன் குப்பைக்கு ரூ.550 வீதம் யுனைடெட் நிறுவனத்துக்கு மாநகராட்சி பணம் கொடுக்கும். 25 ஆண்டுகளுக்கு இந்த தொகையை கணக்கிட்டால் 2,600 கோடி ரூபாய் வருகிறது.
குப்பைகளை இலவசமாக பிராசஸ் செய்ய தேசிய கட்டுமான கழகம் முன்வந்து மாநகராட்சிக்கு கடிதமும் அனுப்பியது. அதை மாநகராட்சி பரிசீலிக்க கூட இல்லை என்று புகார் எழுந்துள்ளது.
எனினும், மாநகராட்சி ஒப்பந்தத்துக்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. எனினும், யுனைடெட் நிறுவனத்துக்கு முதல்கட்டமாக ரூ.18 கோடி கொடுத்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது பற்றி மாநகராட்சி கூடுதல் கமிஷனர் ஆசிஷ் குமார் சிங் கூறுகையில்,
“ஒப்பந்த ஆவணங்கள் மாநில அரசால் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் வரை அந்த நிறுவனம் குப்பை கிடங்கை பராமரிக்க அதிகபட்சமாக ரூ.30 கோடி வரை கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதில் ஒரு பகுதிதான் கொடுக்கப்பட்டது” என்றார். இந்த சர்ச்சை குறித்து யுனைடெட் பாஸ்பரஸ் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.