தினமலர் 21.08.2010
ரோடு போடுவதற்காக ரூ.2.67 கோடி : அவசர கூட்டத்தில் தீர்மானம்
திருப்பூர் : பழுதாகியுள்ள சாலையை சீரமைக்க மற்றும் புதிய சாலைகள் போட, 15 வேலம்பாளையம் நகராட்சி பகுதியில் அரசின் சிறப்பு திட்டம் மூலம் ரூ.2.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி அவசர கூட்டம், தலைவர் மணி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், ரூ.2.67 கோடி மதிப்பில் ரோடு போடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்ட விவாதம்: நகராட்சி பொறியாளர் மல்லிகை: ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பயன்படுத்தி, வரும் நவ., மாதத்துக்குள் ரோடு போடும் பணியை முடிக்கும்படி, அரசு அறிவுறுத்தியுள்ளது.
நடராஜன் (பா.ஜ.,): தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்திவிட்டு, ரோடு போடும் பணியை துவக்கலாம். நகராட்சி முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது. எங்களது வார்டில் இ.பி., காலனி, திருநீலகண்டர் வீதி, சாமுண்டிபுரம் பகுதியில் ஏழு நாட்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.,): பெஸ்ட் ரோட்டில் எதுவரை பணிகள் நடக்கிறது என்பதை கூற வேண்டும். தீர்மானம் நிறைவேற்றுவது ஒரு அளவாகவும், பணிகள் நடப்பது ஒரு அளவாகவும் இருக்கிறது. எங்களது வார்டில் பணிகளை நிறைவேற்றாமல் நகராட்சியினர் புறக்கணிக்கின்றனர்.
நடராஜன்: குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட வார்டு பிரச்னைகளை நகராட்சி அதிகாரிகளிடம் கூற, தனி நேரம் ஒதுக்க வேண்டும்.
செயல் அலுவலர் குற்றாலிங்கம்: பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை குறைகளை நகராட்சியிடம் தெரிவிக்கலாம்.
தேவி (தி.மு.க.,): சந்திராபுரம் பிரிவு, ஜெகநாதன் கடை வீதியில் சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாக கூறுகின்றனர். கூட்டம் நடத்தும்போது, நகராட்சி பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்களை அழைக்க வேண்டும். யார் பணிகள் செய்கிறார்கள்; யார் ஒப்பந்தம் எடுத்திருக்கிறார்கள் என்பது வார்டு கவுன்சிலர்களுக்கே தெரிவதில்லை.
நகராட்சி தலைவர் மணி: ஒப்பந்தாரர் – கவன்சிலர் சந்திப்பு கூட்டம் விரைவில் நடத்தப்படும்.
செயல் அலுவலர்: ஒரு வாரத்துக்குள் பணிகள் முடிக்கப்படும்.
நடராஜன்: மூகாம்பிகை நகரில் டேங்க் கட்ட வேண்டும் என்று கடந்த ஐந்து கூட்டத்தில் வலியுறுத்தியும் பலனில்லை. இங்கிருந்து அனுப்பும் பரிந்துரைக்கு, அரசு ஒப்புதல் அளிப்பதேயில்லை.
பொறியாளர்: கவுன்சிலர் கோரிக்கையை ஏற்கனவே அரசுக்கு அனுப்பி விட்டோம். அரசு முடிவு எடுக்காமல் இருந்தால், நாங்கள் என்ன செய்ய முடியும்.
செயல் அலுவலர்: அரசு ஒப்புதல் அளிக்காமல், இத்தனை நாள் என்று உறுதி அளிக்க முடியாது. ஏற்கனவே, 20 லட்சம் லிட்டர் குடிநீர் கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை.
சுப்ரமணியம் (அ.தி.மு.க.,): விஷ்ண வீதியில் கால்வாய் கட்ட வேண்டும்; போர்வெல் போடுவதில் தாமதம் நீடிக்கிறது.
தலைவர் மணி: சின்ன, சின்ன வேலைகளுக்கு, பொது நிதியில் இருந்து பணிகள் செய்யப்படும். போர்வெல் போடுவதற்கு வாகனங்கள் கிடைப்பது, உதிரிபாகங்கள் பெறுவதில் சிக்கல் இருக்கிறது.
சுப்ரமணி (அ.தி.மு.க.,): கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம், நகராட்சி முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. இதனால், தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது.
தலைவர்: கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் தி.மு.க., அரசால் செய்யப்பட்டு வருகிறது; குறை கூற முடியாது.
நாகராஜ் (ம.தி.மு.க.,): வார்டில் போடப்படும் குழாய்கள், விளக்குகள் தரமில்லாதவையாக இருக்கின்றன; மூன்று நாட்களுக்குள் பழுதாகி விடுகின்றன.
செயல் அலுவலர்: தரமான தனியார் கம்பெனியின் விளக்குகளே பொருத்தப்படுகின்றன. கவுன்சிலர்கள் இணைந்து வேறு கம்பெனி உதிரிபாகங்களை பரிந்துரைத்தால், அதை வாங்கவும் தயாராக உள்ளோம்.
குணசுந்தரி (மா.கம்யூ.,): ரோட்டுக்கு சர்வே எடுக்கும் போது, கால்வாய் கட்ட அளக்கும் போது கவுன்சிலருக்கு தெரியப்படுத்துவதில்லை. எதற்கு அளக்கிறார்கள் என பொதுமக்கள் கேட்கும்போது பதில் அளிக்க முடிவதில்லை. வார்டுக்குள் சர்வே எடுக்கும்போது கவுன்சிலருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பொறியாளர்: நகராட்சியில் மோசமான ரோடுகள் குறித்து அரசு திடீரென கேட்டதால், சர்வே எடுக்கும் போது, கவுன்சிலரிடம் கூற முடிவதில்லை.
குணசுந்தரி: போன் மூலமாவது தகவல் தெரிவிக்க வேண்டும். கவுன்சிலருக்கு தெரியாமல் வார்டுக்குள் ஒரு வேலை நடப்பது, பொதுமக்களிடையே மதிப்பை குறைக்கிறது.
மோகன்ராஜ் (தி.மு.க.,): தமிழகத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் ரோடு போடுவதற்காக 1,710 கோடி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி.
நாகராஜ்: இ.பி., காலனி நகராட்சி பள்ளியில் ஒரு வகுப்பறை கட்டி கொடுக்க ஒருவர் முன்வந்துள்ளார்; நகராட்சி அனுமதி அளிக்க வேண்டும்.
தலைவர்: அதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும். இவ்வாறு, விவாதம் நடந்தது.
அவிநாசிக்கு பட்டியல் ரெடி : அவிநாசி: அவிநாசி பேரூராட்சி அவசர கூட்டம், பேரூராட்சி தலைவி புஷ்பலதா தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கதிரவமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். சிறப்பு சாலைகள் திட்டம் 2010-11ம் ஆண்டு திட்டத்தில், அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் அமைக்க வேண்டிய ரோடுகள் குறித்து கவுன்சிலர்கள் விவாதித்தனர்.
பேரூராட்சி தலைவி புஷ்பலதா கூறுகையில், “”பேரூராட்சி முழுவதும் மூன்றில் இரு பங்கு தார் கான்கிரீட் சாலை, ஒரு பங்கு தார் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. செம்பாக்கவுண்டன்பாளையம் ரோடு, என்.எச்., 47 பிரிவு முதல் ராயம்பாளையம் வரை, நான்காவது வார்டு சமுதாய நலக்கூடம் வரை, பி.எஸ்., சுந்தரம் வீதி, மேற்குரத வீதி, நாயக்கன் தோட்டம், எல்.ஐ.சி., அலுவலகம் முதல் வேளாண் துறை அலுவலகம் வரை பட்டியல் தயாரித்துள்ளோம்,” என்றார்.