தினமணி 14.12.2009
ஈரோடு: 27-ல் தூய்மைப் பணியாளர்கள் மாநாடு, பேரணி
ஈரோடு, டிச.13: ஈரோடு மாநகரில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் மாநாடு, பேரணி வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது.
மாநகராட்சி, நகராட்சிப் பணியாளர்கள், பஸ் நிலையம், மார்க்கெட், அரசு, தனியார் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடிக் குயிருப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் ஈரோடு பஸ் நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் வரும் 27-ம் தேதி நடைபெறும் இம்மாநாட்டுக்கு, ஈரோடு மாநகர தூய்மைப் பணியாளர்கள் சங்க (யுஎஃப்டியு) மாநிலப் பொதுச்செயலர் ஈவிகே.சண்முகம் தலைமை வகிக்கிறார்.
ஐக்கிய தொழிற்சங்க சம்மேளன மாநிலச் செயலர் ஆர்.கணேஷ், நிர்வாகிகள் எம்.மாரப்பகவுண்டர், எம்.கே.முஸ்தபா, மாவட்டச் செயலர் எஸ்.குருராஜ், மாநகரத் தலைவர் என்.சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி பேரணி, கொடியேற்றுதல், தீர்மானங்கள் நிறைவேற்றம், நிர்வாகிகள் தேர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
குறைந்தபட்ச கூலி வழங்குதல், 6 மணி நேர வேலை, ஒப்பந்த அடிப்படையில் உழைப்பைச் சுரண்டுவதைத் தடுத்தல், சமவேலைக்கு சம ஊதியம், 480 நாள்கள் பணிமுடித்தவர்களை நிரந்தரப்படுத்தல், மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தரத் தொழிலாளர்களை நியமிக்க ரூ.2 லட்சம் வரை வசூல் செய்வதைத் தடுத்தல், இலவச வீட்டுமனை, பட்டா, பிரசவ விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.