தினமணி 24.09.2010
வரி செலுத்தாவிட்டால் செப்.27 முதல் ஜப்தி
திருநெல்வேலி,செப்.23: பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை செலுத்தாவிட்டால், இம் மாதம் 27 ஆம் தேதி முதல் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அம் மண்டல உதவி ஆணையர் பாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ள கட்டடங்களுக்கு இம் மாதம் 30 ஆம் தேதி வரையிலான காலத்திற்குரிய சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை உடனே செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் சிலர் இன்னும் சொத்து வரியையும்,குடிநீர் கட்டணத்தையும் செலுத்தாமல் உள்ளனர். வரி செலுத்தாத மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத கட்டடங்களில் இம் மாதம் 27 ஆம் தேதி முதல் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருந்த, பாளையங்கோட்டை–திருச்செந்தூர் சாலையில் ஒரு வீடு மற்றும் வி.எம்.சத்திரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 3 வீடுகள் என மொத்தம் 4 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் வியாழக்கிழமை தூண்டிக்கப்பட்டன. இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.