தினமணி 22.12.2011
27 முதல் மேட்டுப்பாளையத்தில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
மேட்டுப்பாளையம், டிச.21: மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் உள்ள சாமண்ணா குடிநீர் நிலைய நீரேற்று மையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், டிச. 27, 28, 29 தேதிகளில் நகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார், நகராட்சி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) இளங்கோவன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், மேட்டுப்பாளையம் நகராட்சி தலைமை நீரேற்று நிலையத்தில் நீர் உந்தும் கிணறு, நீர் சேகரிக்கும் தொட்டி ஆகியவற்றின் வடிதளங்களில் சேறும், சகதியும் சேர்ந்துள்ளது. இதனால், குடிநீர் நீரேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீரேற்று நிலையத்தை சுத்தம் செய்யும் பணிக்காக வரும் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள், மேட்டுப்பாளையம் நகரில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரை சேமித்து வைத்து, மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.