தினமலர் 08.01.2010
வெளிநாடுகளில் இருந்து பரவிய வைரஸ் தமிழகத்தில் 27 லட்சம் பேருக்கு மர்மக்காய்ச்சல் : நெல்லையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை
திருநெல்வேலி : வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலம் பரவிய புதுவகை வைரஸ் காய்ச்சலால் தமிழகத்தில் 27 லட்சத்து 43 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காய்ச்சலை கண்டறிய மதுரை, ஓசூரில் இருந்து ஆய்வு செய்ய மருத்துவக் குழுவினர் நெல்லை வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
புதுவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், சங்கரன்கோவில், மேலப்பாளையம் பகுதிகளில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்ய முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று நெல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ், இந்திய மருத்துவத்துறை மற்றும் ஓமியோபதித்துறை இயக்குனர் அம்பேத்கர் ராஜ்குமார், நெல்லை கலெக்டர் ஜெயராமன், மாநகராட்சி மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன், கமிஷனர் பாஸ்கரன், பொதுசுகாதாரத்துறை இயக்குனர் இளங்கோ, மருத்துவத்துறை இயக்குனர் நந்தகோபால், இணை இயக்குனர் உஷா ரிஷபதாஸ், துணை இயக்குனர்கள் மீரான் மைதீன், சண்முகசுந்தரம், மதுசூதனன், உமா, பாளை., மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பரவும் புதுவகை வைரஸ் காய்ச்சல் குறித்து முதல்வர், துணை முதல்வர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாக்டர்கள், துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினேன். மேலப்பாளையத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்க 700 பணியாளர்கள் ஒருங்கிணைந்து துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் டெங்கு காய்ச்சல், எலி ஜூரம், சிக்குன்–குனியா இல்லை என தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலமாக இந்த காய்ச்சல் பரவியிருக்கலாம் என தெரிகிறது. புதிய வகை வைரஸ் நோய் என தெரியவந்துள்ளது. இந்த காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய மதுரை ஐ.சி.எம்.ஆர் குழுவினர், ஓசூர் மருத்துவ குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபடுவர். இன்னும் 3 நாட்களில் காய்ச்சலின் தன்மை அறியப்படும். கடந்த ஆண்டில் 30 லட்சத்து 43 ஆயிரத்து 896 பேருக்கு காய்ச்சல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 27 லட்சத்து 43 ஆயிரத்து 953 பேருக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம், கடையநல்லூரில் மருத்துவத்துறையினர் எடுத்த நடவடிக்கையால் காய்ச்சலின் தாக்கம் கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக மருத்துவ முகாம் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வைரஸ் காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. காய்ச்சலால் இறந்ததாக கூறப்படும் நபர்கள் குறித்து விசாரித்ததில் அவர்களுக்கு வெவ்வேறு பாதிப்புக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டியையும் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்பத்திரிகளில் 200 டாக்டர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 897 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாளை., அரசு ஆஸ்பத்திரிக்கு 64 சிமென்ஸ் சி.டி.ஸ்கேன் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள ஆராய்ச்சி பிரிவை மேட்டூருக்கு மாற்றும் முடிவு மத்திய அரசு சம்பந்தமானது. இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
நிலவேம்பு கசாயம், அமுக்ரா சூரணம் : காய்ச்சல் குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், “வைரஸ் காய்ச்சலுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையில் வழங்கப்படும் நிலவேம்பு கசாயம், அமுக்ரா சூரணம், பிண்ட தைலம் ஆகியவை தான் சிறந்த மருந்து. இந்த மருந்து அனைத்து ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார மையங்களிலும் வழங்கப்படுகிறது என்றார்.
இந்திய மருத்துவத்துறை இயக்குனர் ராஜ்குமார் கூறுகையில், “காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நிலவேம்பு கசாயம், அமுக்ரா சூரணம் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும். காய்ச்சல் பாதிப்பு இல்லாதவர்கள் நிலவேம்பு கசாயம் சாப்பிட்டால் வைரஸ் காய்ச்சல் வரவே வராது என்றார்‘.