தினமணி 23.02.2010
27-ல் கோட்டை நகராட்சிப் பள்ளி ஐம்பெரும் விழா
நாமக்கல், பிப்.22: நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் ஐம்பெரும் விழா வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
பள்ளியின் வெள்ளி விழா, புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளின் திறப்பு விழா, முன்னாள் மாணவரும், மத்திய அமைச்சருமான செ. காந்திச் செல்வனுக்கு பாராட்டு விழா, 10-ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்றோருக்கு பரிசளிப்பு விழா, ஓய்வு பெறும் ஆசிரியர், பணியாளர்களுக்கு பாராட்டு விழா என 5 விழாக்களும் ஒன்றாக நடைபெறுகிறது.
பள்ளி வளாகத்தில் வரும் 27-ம் தேதி மாலை நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சகாயம் தலைமை வகிக்கிறார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் செ. காந்திச் செல்வன், புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து பேசுகிறார். மகளிர் மேம்பாட்டு மைய மேலாண்மை இயக்குநர் த.உதயச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.மல்லிகா, பள்ளித் தலைமையாசிரியர் ஆர். தர்மலிங்கம் ஆகியோர் பேசுகின்றனர்.