தினமணி 23.07.2010
போடியில் சுற்றித் திரிந்த 276 நாய்கள் பிடிக்கப்பட்டன
போடி, ஜூலை 22: போடி நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 276 நாய்கள் பிடிக்கப்பட்டன.
போடி நகராட்சிப் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிந்தன. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டுவந்தது. இவற்றைப் பிடித்து, இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்ய ஆணையர் க. சரவணக்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில், தேனியில் செயல்பட்டுவரும் அவார்டு தொண்டு நிறுவனம் மூலம் போடியில் சுற்றித் திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டன. இதில் 276 நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் அறுவை சிகிச்சை செய்யப்படும் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு ஊசியும் போடப்பட்டு, இரண்டு நாள்கள் பராமரிப்பு செய்யப்பட்ட பின், இந்த நாய்கள் திரும்ப விடப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை போடி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, சென்றாயன், தியாகராஜன், சுரேஷ் மற்றும் அவார்டு டிரஸ்ட் நிர்வாகி ராதாகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்