தினமணி 15.06.2010
ரூ. 2.8 லட்சத்தில் 52 குப்பை சேகரிக்கும் வண்டிகள்போடி, ஜூன் 14: போடியில் குப்பைகளைச் சேகரிப்பதற்காக ரூ. 2.8 லட்சம் செலவில் வாங்கப்பட்ட 52 குப்பை வண்டிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன. போடி நகரில் 33 வார்டுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இவற்றில் சேகரிக்கப்படும் குப்பைகள் பழைய குப்பைக் கிடங்குக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் உரமாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்தக் கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாகச் சேர்ந்ததால், உரம் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், சிறைக்காடு பகுதியில் புதிய குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது. இதில் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்த்து, மக்கும் தன்மை கொண்ட குப்பைகளை மட்டும் சேகரித்து, உரம் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போடி நகரை குப்பைகளற்ற நகராக அறிவித்தும், 100 சதவீத பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்றவும் நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், நகராட்சித் தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, போடி நகரில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீடுகளில் சேரும் குப்பைகளைச் சேகரிப்பதற்காக நகராட்சி சார்பில் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் 52 குப்பை சேகரிக்கும் தள்ளுவண்டிகள் வாங்கப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் காய்கறிக் கழிவுகள் போன்ற மக்கும் தன்மையுடைய குப்பைகள் தனியாகவும், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்ட மக்காத தன்மை கொண்ட குப்பைகள் தனியாகவும் சேகரிக்கப்படும். இந்த வண்டிகளை பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி, நகராட்சி அலுவலகத்தில நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ரதியாபானு தலைமை வகித்தார். ஆணையர் முன்னிலை வகித்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். லட்சுமணன் தொடங்கிவைத்து பேசுகையில், போடி நகரை குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத நகராக மற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். குப்பைகளைச் சாலைகளில் கொட்டாமல், அவற்றைச் சேகரிக்க வரும் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
சுகாதாரப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றார் அவர். சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, சென்றாயன், தியாகராஜன், சேகர் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.