தினமலர் 22.07.2010
திருச்சி மாநகராட்சி 28வது வார்டு இடைத்தேர்தல் : இன்று ஓட்டுப்பதிவு
திருச்சி: திருச்சி மாநகராட்சி 28வது இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று நடக்கிறது. திருச்சி மாநகராட்சி 28வது வார்டு கவுன்சிலர் சுப்பையா இறந்ததை அடுத்து, அந்த வார்டு கவுன்சிலரை தேர்ந்தெடுக்க இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. அரியமங்கலம், காமராஜ்நகர், நேருஜிநகர், கணபதிநகர், சீனிவாசனநகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் மொத்தம் ஏழாயிரத்து 95 வாக்காளர்கள உள்ளனர். தி.மு.க., சார்பில் தாஜூதீன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மீராமைதீன் ஆகியோர் உள்பட ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, சேலை, வேட்டி வழங்குவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இறுதி பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இன்று காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. எஸ்.ஐ.டி., பாலிடெக்னிக் கல்லூரி ஓட்டுப்பதிவு மையத்தில் மூன்று “பூத்‘கள், காமராஜ்நகர் மாநகாட்சி நடுநிலைப்பள்ளியில் ஐந்து “பூத்‘கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்படி ஃபோட்டோ வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 14 ஆவணங்களை காட்டி ஓட்டளிக்கலாம். ஓட்டுப்பதிவு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும். ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பொன்மலை கோட்ட அலுவலக அறையில் (ஸ்டராங் ரூம்) பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி மையங்களுக்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, சில மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும்.