தினமணி 23.07.2010
திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு இடைத்தேர்தல்: 67 சதம் வாக்குப்பதிவு
திருச்சி, ஜூலை 22: திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு இடைத்தேர்தலுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது 67 சதம் வாக்குகள் பதிவாகின.
திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கென சேஷாயி தொழில் பயிற்சி நிலையத்தில் 3 வாக்குச்சாவடிகளும், காமராஜ் நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 5 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த வார்டிலுள்ள மொத்த வாக்காளர்கள்– 7,095. இவர்களில் ஆண்கள்– 3,502, பெண்கள்– 3,593. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 1,381 வாக்குகள் பதிவாகின. மொத்தப் பதிவில் இது 19 சதம். 11 மணி நிலவரப்படி 2,414 வாக்குகள் பதிவாகின (34 சதம்). பகல் ஒரு மணி நிலவரப்படி 3,545 வாக்குகள் பதிவாகின (50 சதம்). பிற்பகல் 3 மணி நிலவரப்படி 4,297 வாக்குகள் பதிவாகின (61 சதம்).
மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மொத்தம் 4,765 வாக்குகள் பதிவாகின. இது 67 சதமாகும். இவற்றில் ஆண் வாக்காளர்கள் 2,125 பேர், பெண் வாக்காளர்கள் 2,640 பேர்.
வாக்கு எண்ணிக்கை: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டன. மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான த.தி. பால்சாமி, பார்வையாளர் எஸ். சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பறையில் வைத்து சீல் வைக்கப்பட்டன.
மாநகராட்சி மைய அலுவலக வளாகத்திலுள்ள பொன்மலை கோட்ட அலுவலகத்தில், வருகிற 24-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 8 பெட்டிகள் மட்டுமே உள்ளதால், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய அரை மணி நேரத்தில் முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது.