தினகரன் 26.12.2009
29 ல் கோவை மாநகராட்சி கூட்டம்
கோவை : கோவை மாநகராட்சியில் கடந்த 23&07&2007ம் ஆண்டு குடிநீர் கட்டணம் உயர்த்தும் தீர்மானம் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை செயல்படுத்த எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், மன்றத்தில் முடிவு செய்த குடிநீர் கட்டணத்தை தமிழக அரசின் நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திருத்தி புதிய கட்டண திட்டத்தை அறிவித்தது. இந்தக் கட்டண உயர்வு அமலாக்கப்படவில்லை.
மாநகராட்சி மன்றத்தில் 2 முறை குடிநீர் கட்டண உயர்வு தீர்மான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. வரும் 29ம் தேதி நடக்கவுள்ள மாமன்ற கூட்டத்தில் குடிநீர் கட்டண உயர்வு தீர்மானம் இடம் பெறும். இதில் கட்டண உயர்வை அமலாக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மாநகரில் தற்போது 1,11,952 வீடுகள், குடியிருப்பு அல்லாத 2,869 இணைப்புகள் உட்பட 1,15,757 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குடியிருப்பு, குடியிருப்பு அல்லாத இணைப்புகளின் பயன்பாட்டிற்கு மாதம் 20 ஆயிரம் லிட்டர் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் இதுவரை குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகை ரூ.126.59 கோடி. பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில் மாநகராட்சியின் 30 சதவீத பங்களிப்பு தொகை ரூ.49.61 கோடி.
குடிநீர் கட்டண உயர்வை செயல்படுத்தினால் மட்டுமே பில்லூர் 2வது குடிநீர் பணிகளை தடையின்றி முடிக்க முடியும். இல்லாவிட்டால் சிக்கல் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் வாய்ப்புள்ளது. இருப்பினும் தீர்மானத்தை நிறைவேற்ற வாய்ப்புள்ளதா என மாநகராட்சி நிர்வாகம் யோசித்து கொண்டிருக்கிறது.