தினமலர் 30.03.2010
29 வார்டுகளில் கூட்டு துப்புரவு பணிக்கு தமது சொந்த செலவில் 25 பணியாளர்கள்: அமைச்சர் மைதீன்கான் நியமித்தார்
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் கூட்டு துப்புரவுப் பணி மேற்கொள்ள 25 பணியாளர்களை தமது சொந்த செலவில் சுற்றுச் சூழல் அமைச்சர் மைதீன்கான் நியமித்துள்ளார். இதன் மூலம் வாரம்தோறும் ஒவ்வொரு வார்டுளிலும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாநகராட்சியில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் 55 வார்டுகள் உள்ளன. வார்டுகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லை. 400க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.
மாநகராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்களை கொண்டு மாநகராட்சி முழுமைக்கும் துப்புரவுப் பணி என்பது இயலாத காரியமாக உள்ளது. வாரம் ஒரு முறை மாநகராட்சியில் உள்ள அனைத்து பணியாளர்களையும் ஒருங்கிணைத்து ஒரு வார்டு என்ற முறையில் கூட்டு துப்புரவுப் பணியும் மாநகராட்சி சார்பில் நடந்துவருகிறது.இருப்பினும் மாநகராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் மூலம் முழுமையாக கூட்டு துப்புரவுப் பணி மேற்கொள்ள முடியவில்லை.இதையடுத்து பாளை., தொகுதி எம்.எல்.ஏவும், சுற்றுச்சூழல் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன்கான், தமது சொந்த செலவில் 25 துப்புரவு பணியாளர்களை கூட்டு துப்புரவு பணிக்காக மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார். இந்த 25 பணியாளர்கள் மூலம் வாரம் ஒரு முறை பாளை., தொகுதியுள்ள 29 வார்டுகளில் கூட்டு துப்புரவுப் பணி நடத்தப்படும் என அமைச்சர் மைதீன்கான் தெரிவித்துள்ளார்.
இந்த பணிக்கான துவக்க விழா மேலப்பாளையம் 29வது வார்டில் நேற்று நடந்தது. கூட்டு துப்புரவுப்பணிகளை சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் துவக்கிவைத்தார். மேலப்பாளையம் ஆமீன்புரம் பகுதியில் கழிவு நீரோடை சுத்தம் செய்தல் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் டாக்டர் கலுசிவலிங்கம், மாநகரப் பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர், மேலப்பாளையம் மண்டல உதவிக்கமிஷனர் கருப்பசாமி, சேர்மன் முகம்மதுமைதீன், சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், அரசகுமார், சாகுல்ஹமீது, ஆறுமுகம், வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் கூறுகையில், ‘நெல்லை மாநகராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்களால் அனைத்து பகுதிகளிலும் துப்புரவுப் பணியை முழுமையாக மேற்கொள்ளவதில் சிரமம் உள்ளது. தொகுதிக்கு செல்லும் போது துப்புரவு பணி, குடிநீர் பிரச்னைகளை தான் மக்கள் புகாராக சொல்கின்றனர். குடிநீர் பிரச்னையை நிறைவேற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துப்புரவு பிரச்னையை பொறுத்த வரையில் 25 பணியாளர்களை எனது சொந்த செலவில் மாநகராட்சிக்கு வழங்கியுள்ளேன். அவர்கள் ஒவ்வொரு வார்டுகளிலும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பில் துப்புரவுப் பணியை மேற்கொள்வர். இந்த துப்புரவு பணி வாரம் தோறும் ஒவ்வொரு வார்டுகளிலும் நடைபெறும் என்றார்‘.