தினமலர் 19.08.2010
மேம்பாலம் 29ம் தேதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
பட்டாபிராம் : “”பட்டாபிராம், திருநின்றவூர் மேம்பாலம் உள்ளிட்ட ஐந்து பாலங்கள் வரும் 29ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்,” என நெடுஞ்சாலை துறை அமைச்சர் சாமிநாதன் கூறினார்.திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், திருநின்றவூரில் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இப்பாலங்களை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டார். பின், நிருபர்களிடம் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டாபிராம், திருநின்றவூர் ரயில்வே மேம்பாலங்களும், வெள்ளவேடு, செங்குன்றம் மற்றும் கேசவராஜகுப்பம் சாலையில் 31.17 கோடி செலவில் ஐந்து பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.வண்டலூர் – நெமிலிச்சேரி வரை ரூ.1,082 கோடி செலவில் அமையவுள்ள ஆறு வழிப்பாதை திட்டம், போரூர் சிக்னலில் ரூ.35 கோடி செலவில் அமையவுள்ள நான்குவழி உயர்மட்ட மேம்பாலம், முகப்பேர் அருகே கூவம் ஆற்றில் ரூ.16 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம், சடையங்குப்பம் பக்கிங்காம் கால்வாயில் ரூ.16.5 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படவுள்ளன. வரும் 29ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின், கட்டி முடிக்கப்பட்ட பாலங்களை திறந்து வைத்து, புதிய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுகிறார்.இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் கூறினார்.