தினமணி 23.11.2010
சென்னையில் 29 ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற திட்டம்: தலைமைப் பொறியாளர்
சென்னை, நவ. 22: சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் உள்ள 29 ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் டி. அன்பழகன் தெரிவித்தார்.
“சென்னையில் வெள்ளநீர் தடுப்பு’ குறித்த கருத்தரங்கம் அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடந்தது. தொலை உணர்வு மையம் சார்பில் நடந்த இந்தக் கருத்தரங்கில் டி. அன்பழகன் பேசியது:
சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் சிறிய மழை பெய்தாலே வெள்ள அபாயம் ஏற்படுகிறது. முக்கிய நீர் நிலைகள் மற்றும் ஏரிகள் முறையாக பராமரிக்கப்படாததும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுமே இந்த வெள்ள அபாயத்துக்கு காரணமாகும்.
எனவே சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் 29 ஏரிகளை தேர்வு செய்துள்ளோம். அந்த ஏரிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாருவது என திட்டமிட்டுள்ளோம். இதற்கு உலக வங்கியின் கடன் உதவியைக் கேட்டுள்ளோம். அதற்கான அனுமதியும் உலக வங்கியிடமிருந்து கிடைத்துள்ளது.
இதன் மூலம் சென்னையில் வெள்ள அபாயத்தை ஓரளவுக்கு தடுக்க முடிவதுடன், நிலத்தடி நீர் நிலையும் வெகுவாக உயரும் என்றார் அன்பழகன்.
தொலை உணர்வு மைய இயக்குநர் எம். ராமலிங்கம் கூறியது:
சென்னையில் கடந்த 2005-ம் ஆண்டு பெரிய அளவில் வெள்ள அபாயம் ஏற்பட்டது. அடையாறு, கிழக்கு வேளச்சேரி, சூளை, சூளைமேடு உள்ளிட்ட 36 பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
அந்த பகுதிகளை வானில் இருந்து லேசர் கதிர் மூலம் புகைப்படம் (ஏஎல்டிஎம்) எடுத்து ஆய்வுகள் நடத்தினோம். இந்த பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் ரயில்வே பாதை செல்லும் பகுதிகளில் மழை நீர் போக்கும் மதகுகள் முறையாக அமைக்கப்படாதது தெரிய வருகிறது.
மேலும் நீர் சேகரிப்பு குட்டைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது போன்ற காரணத்தால் சென்னையில் வெள்ள பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது.
சாலைகளில் மதகுகள் அமைப்பது, குட்டைகளை பராமரிப்பதன் மூலம் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க முடியும். மேலும் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துவதன் மூலமும் இதற்கு தீர்வு காணலாம்.
இதனால் வெள்ள அபாயத்தை தவிர்ப்பதுடன், மழைநீர் முழுவதும் கடலுக்கு செல்வதையும் தடுக்க முடியும்.
இது போன்ற செயல் திட்டங்களை சென்னை மாநகராட்சியும், பொதுப்பணித் துறையும் இணைந்து ஜவாஹர்லால் நேரு நகர சீரமைப்பு திட்டத்தின் கீழ் செய்து வருகின்றன.
எங்களது ஆய்வு முடிவுகளை மாநகராட்சி, பொதுப்பணித்துறையிடம் வழங்கியுள்ளோம் என்றார் ராமலிங்கம்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் டி. கார்த்திகேயன், அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.