திருத்தங்கலில் ரூ.29 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்கள் திறப்பு
சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் திருத்தங்கல் நகராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை சனிக்கிழமை செய்தி, விளம்பரம் மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.
திருத்தங்கல் அண்ணாகாலனி, இந்திராநகர், பாண்டியன்நகர் ஆகிய பகுதிகளில் தலா ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் சுகாதார வளாகங்களையும், பெரியார் காலனியில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் சுகாதார வளாகத்தையும், முருகன் காலனியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் மேல்நிலைத் தொட்டியையும் அமைச்சர் திறந்து வைத்து பேசியதாவது:
மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது சுகாதார வளாகங்கள், மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்காக பல நல்ல திட்டங்கள் தீட்டப்பட்டு முதல்வர் உத்தரவின்பேரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் எஸ்.ஜி.ரெங்கன், நகர்மன்றத் தலைவர் தனலட்சுமி கணேசமூர்த்தி, துணைத்தலைவர் சக்திவேல், மாவட்ட கவுன்சிலர்கள் கருப்பசாமி, சிவகுமார், ஆணையாளர் (பொறுப்பு) முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.