தினமலர் 26.08.2014
எட்டுக்கு நான்கு! குளங்களுக்கு மாநகராட்சி ‘மறுவாழ்வு’; ரூ.29.47 கோடியில் புனரமைக்க முடிவு

கோவை : கோவை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட எட்டு குளங்களில், முதல்
கட்டமாக நான்கு குளங்களை, 29.47 கோடி ரூபாயில் புனரமைக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர எல்லைக்குள், பொதுப்பணித்துறை
பராமரிப்பில் இருந்த, நரசம்பதி, கிருஷ்ணம்பதி, செல்வம்பதி, முத்தண்ணன்,
செல்வசிந்தாமணி, பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லுார் என, எட்டு
குளங்கள், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன.குளங்களில் இருக்கும்
குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி, முட்புதர்களை அகற்றி, குளத்தை
துார்வாரி, கரையை பலப்படுத்தி, கழிவுநீரை சுத்திகரித்து தேக்கவும்,
மழைக்காலங்களில் மழை நீரை முழுமையாக குளங்களில் சேமித்து, நிலத்தடி
நீர்மட்டத்தை பாதுகாப்பதற்கே, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குளங்கள், 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும்,
ஆண்டு குத்தகையாக குளம் ஒன்றுக்கு, 100 ரூபாய் வீதமும் செலுத்தப்படுகிறது.
ஜவஹர்லால்நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில், மத்திய, மாநில அரசு
மானியம் மற்றும் நிதியுதவி பெற்று குளங்களை புனரமைக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், அரசு நிதியுதவி கிடைக்காததால், குளங்கள் புனரமைப்பு திட்டம், ஐந்து
ஆண்டுகளாக இழுபறியில் உள்ளது.இந்நிலையில், கடந்த 2012 – 13ம் ஆண்டுக்கான
பொதுப்பணித்துறை விலை அட்டவணைப்படி, குளம் புனரமைப்பு பணிக்கு 200 கோடி
ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. தற்போது, 2013 – 14ம்
ஆண்டு விலை அட்டவணைப்படி, 232 கோடி ரூபாய்க்கு திருத்திய விரிவான திட்ட
அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசின் நிதியுதவி பெறும் பொருட்டு, அரசு
துறைகளுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,
கடந்தாண்டு பொதுநல அமைப்புகள் முயற்சியால், பெரியகுளம் துார்வாரப்பட்டு,
கரை பலப்படுத்தப்பட்டது. இந்தாண்டு, மாநகராட்சி நிர்வாகத்தின்
நடவடிக்கையால், தனியார் தொண்டு நிறுவனத்தினர் செல்வசிந்தாமணி குளத்தை
துார்வாரும் முறையியில் ஈடுபட்டுள்ளனர். எந்த குளத்திலும், கழிவுநீரை
சுத்திகரித்து தேக்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், குறைந்த
பரப்பிலுள்ள குளங்களை, துார்வாரி புனரமைக்க, மாநகராட்சி நிர்வாகம்
நடவடிக்கை எடுத்து வருகிறது. நரசம்பதி குளத்தை 9.95 கோடி ரூபாயிலும்,
கிருஷ்ணம்பதி குளத்தை 3.325 கோடியிலும், செல்வம்பதி குளத்தை 7.7
கோடியிலும், குமாரசாமி (முத்தண்ணன்) குளத்தை 8.5 கோடி ரூபாயிலும் புனரமைக்க
திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, தமிழ்நாடு உறுதிபடுத்தப்பட்ட நகர்ப்புற
மேம்பாட்டு திட்ட கடனாக 60 சதவீதமும், மானியமாக 30 சதவீதமும் பெற்றும்,
மிதமுள்ள 10 சதவீத தொகையை மாநகராட்சி நிர்வாகம் மூலம் செலவிட
திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உறுதிபடுத்தப்பட்ட நகர்ப்புற
மேம்பாட்டு திட்டத்தின் கடன் மற்றும் மானியம் பெற்று, முதல் கட்டமாக நான்கு
குளங்களை துார்வாரி, கரையை பலப்படுத்தி, புனரமைக்க, அனுமதி வேண்டி
அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம், நேற்று நடந்த
மாமன்ற கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.ஏற்கனவே இரண்டு குளங்கள்
சுத்தப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது நான்கு குளங்களை புனரமைக்க
திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாலாங்குளம், சிங்காநல்லுார்
குளங்களை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் துார்வார மாநகராட்சி
நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
குறிச்சி குளத்தை கவனிக்கணும்!
மாமன்ற
கூட்டத்தில் பேசிய தெற்கு மண்டல தலைவர் பெருமாள்சாமி, ”குறிச்சி
குளத்தின் கரையை பலப்படுத்தி, நடைபாதை மற்றும் பூங்கா அமைக்க, மாநகராட்சி
பட்ஜெட்டில், ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. குறிச்சி குளத்தை
மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். விளக்கமளித்த
மாநகராட்சி செயற்பொறியாளர் நடராஜ், ”இந்த திட்டம் பற்றி
பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தபின்,
திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.