தினத்தந்தி 16.12.2013
ஈரோடு பகுதியில் ரூ.2½ கோடி மதிப்புள்ள விலையில்லா மிக்சி, கிரைண்டர்–மின்விசிறி

ஈரோடு
மாநகராட்சிக்கு உள்பட்ட ஆர்.என்.புதூர் மற்றும் பி.பி.அக்ரஹாரம் பகுதியில்
ரூ.2½ கோடி மதிப்புள்ள விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும்
மின்விசிறிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்.
விலையில்லா பொருட்கள்….
ஈரோடு மாநகராட்சியில் 2, 3 மற்றும் 5–வது
வார்டுக்கு உள்பட்ட ஆர்.என்.புதூர் மற்றும் பி.பி.அக்ரஹாரம் பகுதிகளை
சேர்ந்தவர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும்
விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சண்முகம் தலைமை
தாங்கினார். முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி
எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
தோப்பு வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு
விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி பேசினார். அப்போது
அவர் கூறியதாவது:–
ரூ.83 கோடி
தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிக்சி,
கிரைண்டர், மின்விசிறிகள் பெண்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு
மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்து 333 பெண்களுக்கு ரூ.83
கோடியே 13 லட்சம் மதிப்பில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள்
வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக முதல்–அமைச்சராக ஜெயலலிதா
பொறுப்பேற்றவுடன் ஒரு கோடியே 83 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின்
மூலம் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்துக்குத்தான் முதல்
கையெழுத்திட்டார்.
ஏழைக்குடும்பத்தில் பிறந்த பெண்கள் திருமண
வயதை அடைந்தும் வறுமை மற்றும் ஏழ்மை காரணமாக திருமணம் ஆகாமல் உள்ள நிலையை
அறிந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஏழை பெண்களுக்காக தாலிக்கு தங்கமும்,
திருமண நிதி உதவியும் வழங்கி வருகிறார்.
நேரடியாக சென்றடைகிறது
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ,
மாணவிகளுக்கு 4 செட் சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள்,
வண்ணப்பென்சில்கள், புத்தகப்பை, காலணி, சைக்கிள் ஆகிய அனைத்தும்
விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தற்போது அரசு
பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியும் வழங்கப்பட்டு
வருகிறது.
இவ்வாறு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறினார்.
6,240 பேருக்கு விலையில்லா மிக்சி
அதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சியின்
2–வது வார்டுக்கு உள்பட்ட 2 ஆயிரத்து 307 பேருக்கும், 3–வது வார்டுக்கு
உள்பட்ட 1,983 பேருக்கும், 5–வது வார்டுக்கு உள்பட்ட 1,950 பேருக்கும் என
மொத்தம் 6 ஆயிரத்து 240 பேருக்கு ரூ.2 கோடியே 59 லட்சம் மதிப்புள்ள
விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்
வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.கணேஷ்,
ஈரோடு ஆர்.டி.ஓ. வை.குணசேகரன், ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம்,
துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர்
கே.வி.மணிமேகலை, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தலைவர்
பி.சி.ராமசாமி, மண்டலக்குழு தலைவர்கள் மனோகரன், ஆர்.முனியப்பன்,
பி.கேசவமூர்த்தி, பி.காஞ்சனா பழனிச்சாமி, சிறப்பு திட்ட செயலாக்கம்
தனித்துணை கலெக்டர் ரவி, தாசில்தார் சாகுல் அமீது உள்பட பலர் கலந்து
கொண்டனர்.