தினமணி 5.11.2009
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க 3 நகராட்சிகள் தேர்வு
திருவண்ணாமலை, நவ.4: திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் திட்டத்தின் கீழ் செய்யாறு, ஆரணி, வந்தவாசி நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பிரசவம், அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் சோதனை செய்யப்படுகின்றன.
நகரங்களில் அரசு மருத்துவமனைகள் இருந்தாலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளது போன்ற சிகிச்சை கிடைப்பதில்லை. எனவே ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகராட்சிகளில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை வருவாய் மாவட்டம், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட செய்யாறு, ஆரணி, வந்தவாசி நகராட்சிகளில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்படுகின்றன.
இதுதொடர்பாக செய்யாறு சுகாதார துணை இயக்குநர் டாக்டர் தேவபார்த்தசாரதி கூறியது:
நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு டாக்டர், 5 செவிலியர்கள், மருந்தாளுநர், லேப் டெக்னிஷியன், துணை சுகாதார செவிலியர் என மொத்தம் 12 பேர் நியமிக்கப்படுவர்.
தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் மூலம் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான ஊதியம், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், உபகரணங்கள் தருவிக்கப்படும் என்றார் தேவபார்த்தசாரதி.