தினமணி 12.11.2009
ஒசூர் பஸ் நிலைய கடைகளுக்கு 3-ம் கட்ட ஏலம்
ஒசூர், நவ.11: ஒசூர் புதிய நவீன பஸ் நிலைய கடைகளுக்கான 3-ம் கட்ட முன் ஏலம் மற்றும் முன் ஒப்பந்தப்பள்ளி புதன்கிழமை நடைபெற்றது.
ஒசூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஏலத்துக்கு சென்னை நகராட்சி நிர்வாகக் கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன், சேலம் மாநகராட்சி ஆணையரும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருமான (பொ) பழனிச்சாமி, ஒசூர் நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கடை எண் 1,4,6,7,39,40,42,53,73 மற்றும் உணவு விடுதிகளுக்கு ஏலம் நடைபெற்றது. இதில் குறிப்பாக 4-ம் எண் கடை ரூ.21,700, 39-ம் எண் கடை ரூ.24,250, உணவு விடுதி ரூ.45 ஆயிரம் ஏலம் போனது.
இது குறித்து சென்னை நகராட்சி கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியது:
ஒசூர் புதிய பஸ் நிலையப் பணிகளை முடிக்க மேலும் ரூ.3 கோடி தேவைப்படுவதால் முன்ஏலம் மற்றும் முன் ஒப்பந்தப்புள்ளி ஆகியவை நடைபெற்று வருகிறது. தற்பொழுது ஒரு சில கடைகள் மட்டும் முன் ஏலம் நடைபெற்றுள்ளது. மீதம் உள்ள கடைகளும் விரைவில் முன்ஏலம் நடத்தப்படும்.
தற்பொழுது பழைய பஸ் நிலைய கடை சங்கத்தினர் தொடர்ந்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் ஏலம் எடுத்தவர்களுக்கு கடையை உறுதி செய்து, ஏலத்தில் கடை கிடைக்காதவர்களுக்கு அவர்கள் செலுத்திய டெப்பாசிட் தொகை ரூ.4 லட்சம் உடனடியாக திருப்பித் தரப்படும் என்றார்.