தினமலர் 01.04.2010
ஆரணி நகராட்சிக்கு வரிபாக்கி 3 கோடியே 20 லட்சம் ரூபாய் : கமிஷனர் தகவல்
ஆரணி : ‘ஆரணி நகராட்சிக்கு 3 கோடியே 20 லட்சம் ரூபாய் வரிபாக்கி உள்ளது‘ என்று கமிஷனர் சசிகலா கூறினார்.
ஆரணி நகராட்சி கூட்டம், அதன் தலைவர் சாந்தி லோகநாதன் தலைமையில் நகர் மன்ற கூடத்தில் நேற்று நடந் தது. கமிஷனர் சசிகலா முன்னிலை வகித்தார். மேனேஜர் ராமஜெயம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ., சிவானந்தம் கலந்து கொண்டார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
ரமேஷ் (திமுக): ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் சிமென்ட் சாலை அமைத்த 3வது நாளில் ஜல்லிகள் பெயர்ந்துள்ளது. எனவே, தரமான சிமென்ட் சாலை அமைக்க கான்டிராக்டரை எச்சரிக்க வேண்டும்.
எம்.எல்.ஏ.,: அதற்கு கான்டிராக்டர் பொறுப்பேற்க முடியாது. சிமென்ட் ரோடு அமைக்கும்போது நகராட்சி அதிகாரிகள், உடன் இருந்து பார்க்க வேண்டும்.
கண்ணன்(தேமுதிக): 4 ஆண்டுகளில் 10வது வார்டில் 6 லட்சத்துக்கு மட்டும் பணிகள் நடந்துள்ளது.
எம்.எல்.ஏ.,: 10வது வார்டுக்கு தேவையான பணிகளை எழுதிக் கொடுங்கள்.
ரத்தினகுமார் (மதிமுக): கோடை காலத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
எம்.எல்.ஏ.,: நகராட்சி கமிஷனர், சேர்மன், அதிகாரிகள் இடையே தனியாக இது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கலாம்.
ரத்தினகுமார் (மதிமுக): நகரில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டுவதற்கு தனியாக இடம் வாங்க வேண்டும்.
எம்.எல்.ஏ.,: போளூர் ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சங்கர் (திமுக): தனியார் துப்புரவு பணியாளர்கள் சரியாக குப்பைகளை வாருவதில்லை.
எம்.எல்.ஏ.,: முதலில் நன்றாக செய்தார்கள். இப்போது வேலையில் அக்கறை காட்டவில்லை. கமிஷனரிடம் டெண்டர் எடுத்தவரை அழைத்து எச்சரியுங்கள். இல்லை என்றால் டெண்டர் ‘கேன்சல்‘ செய்வதாக கடிதம் அனுப்புங்கள்.
கண்ணன் (தேமுதிக): டவுன் பகுதியில் இலவச கலர் டி.வி., எப்போது வழங்கப்படும்?
எம்.எல்.ஏ.,: இன்னும் 3 மாதத்தில் வழங்க உள்ளோம்.
ரத்தினகுமார் (மதிமுக): நகராட்சி அதிகாரிகள் 2 ஆயிரம் ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளவர்களை மிரட்டுகின்றனர். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேல் வரி பாக்கி வைத்துள்ளவர்களை கண்டுகொள்வதில்லை.
கமிஷனர்: கடந்த ஒரு மாதமாக தீவிர வரி வசூலில் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலம் 50 சதவீதம் வரி வசூலாகி உள்ளது. அப்படி இருந்தும் சொத்து வரி ஒரு கோடியே 51 லட்சத்து 75 ஆயிரம், தொழில் வரி 87 லட்சத்து 97 ஆயிரம், குடிநீர் வரி 35 லட்சம், இதர வரியினங்கள் 47 லட்சத்து 65 ஆயிரம் என பல வரிகள் உட்பட மொத்தம் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, பாக்கி உள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து நகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக வரி வசூலிக்க வரும்போது அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். அதன் மூலம் 100 சதவீதம் வரி வசூல் செய்துவிட்டால் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
சேர்மனுக்கு ‘வாய்ஸ்‘ கொடுத்த எம்.எல்.ஏ.,: பொதுவாக, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு நகராட்சி தலைவரோ, கமிஷனரோதான் உரிய பதில் அளிக்க வேண்டும். ஆனால், நேற்று நடந்த ஆரணி நகராட்சி கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எம்.எல்.ஏ., சிவானந்தமே, பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனால், ‘கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு சேர்மனுக்கு பதிலாக, எம்.எல்.ஏ. பதில் சொல்றாரே‘ என தி.மு.க., கவுன்சிலர்களே முணுமுணுப்புடன் கலைந்து சென்றனர்.