தினகரன் 20.01.2010
3 ஓட்டல்களுக்கு சீல்
சென்னை : கழிவுநீரை சாலையில் விட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய 3 ஓட்டல்களுக்கு மாநகராட்சி நேற்று சீல் வைத்தது.
மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சில ஓட்டல்கள் கழிவுநீரை சாலையில் விட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதற்காக, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதன்படி, மண்டல அதிகாரி ஜெ.அட்லி, உதவி சுகாதார அதிகாரி டாக்டர் எம்.ராஜா, சுகாதார ஆய்வாளர்கள், உணவு ஆய்வாளர்கள் ஆகியோர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகங்களை நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, காஜா உணவு விடுதி, முல்லை உணவு விடுதி, விருதுநகர் தங்கும் விடுதியில் உள்ள ஜெயந்தி உணவு விடுதி ஆகியவை, கழிவுநீருடன் சமையல் கழிவுகள் மற்றும் திடக்கழிவுகளை கழிவுநீர் கால்வாயில் நேரிடையாக செலுத்துவதால் அடைப்புகள் ஏற்பட்டு, கழிவுநீர் சாலைகளில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதை கண்டறிந்தனர்.
இதன்மூலம் பொதுமக்களுக்கும், உணவு உண்ண வருபவர்களுக்கும் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதால், பொது சுகாதார சட்டத்தின்படி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அந்த 3 உணவு விடுதிகளுக்கும் சீல் வைத்தனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கை தொடரும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.