தினமணி 05.05.2010
திருச்செந்தூர் பேரூராட்சியில் குடிநீர் இணைப்புகளுக்கு ரூ. 3 கூடுதல் கட்டணம்
திருச்செந்தூர், மே 4: திருச்செந்தூர் பேரூராட்சியில் குடிநீர் இணைப்புகளுக்கு மேல் வரியாக ரூ. 3 வசூல் செய்ய மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்செந்தூர் பேரூராட்சி மன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவர் வெ.ம.மகேந்திரன் தலைமையில், செயல் அலுவலர் மெ.வீரப்பன் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் திருச்செந்தூர் பேரூராட்சியிலுள்ள குடிநீர் இணைப்புகளுக்கு மாத குடிநீர் கட்டணத்துடன் மேல் வரியாக ரூ. 3 வசூல் செய்ய தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், கவுன்சிலர் சண்முகரவி, பேரூராட்சியின் தினசரி காய்கறி சந்தையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடைகளின் அளவுகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்த செயல் அலுவலர் மெ.வீரப்பன், கடைகளின் அளவுகளை முறைப்படுத்திய பின்பு ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். துணைத் தலைவர் க.இசக்கியம்மாள் உள்பட 16 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.