தினமலர் 06.05.2010
வாகன பார்க்கிங் கட்டணம் 3 மடங்கு உயர்வு; அதிருப்தி
கோவை : மாநகராட்சி பஸ் ஸ்டாண்ட்களில் இரு சக்கர வாகன பார்க்கிங் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.கோவை, காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் மற்றும் மத்திய பஸ் ஸ்டாண்ட், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட்களில் இரு சக்கர வாகன ‘பார்க்கிங் ஸ்டாண்ட்‘ உள்ளது. இங்கு, கடந்த ஏப்.,1 முத பார்க்கிங் கட்டணம் மூன்று மடங்குஉயர்த்தப்பட்டுள்ளது. முன்பு, 24 மணி நேரத்துக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
தற்போது இத்தொகை, வாகனத்தை ஆறு மணி நேரம் மட்டுமே நிறுத்துவதற்கான கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர், 24 மணி நேரம் வாகனத்தை நிறுத்திச் சென்றால், 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பஸ் ஸ்டாண்ட்களில் வாகனம் நிறுத்துவோர், பெரும்பாலும் வெளியூர்களில் வேலை செய்பவர்கள். இவர்கள் கூடுதல் பணி நிமித்தம் காரணமாக இரண்டு, மூன்று நாட்கள் வாகனத்தை நிறுத்திச் சென்றால் 40, 60 ரூபாய் வரை கட்டணம் செலுத்த நேரிடுகிறது.
மேலும், ஆறு மணி நேரத்துக்கும் சற்று கூடுதலாக ஓரிரு நிமிடங்கள் தாமதமாக வந்து வாகனத்தை எடுத்தாலும், அடுத்த ஆறு மணி நேரத்துக்கும் சேர்த்து 10 ரூபாயாக கட்டணம் செலுத்த அங்குள்ள ஊழியர்கள் வற்புறுத்துகின்றனர். நடுத்தர குடும்பங்களை பாதிக்கும் பார்க்கிங் கட்டணத்தை குறைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.