தினமணி 28.06.2010
புதிய பேருந்து நிலையம், வண்டிப்பேட்டை பகுதி கடைகளுக்கு உரிமக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்க நகர்மன்றத்தில் தீர்மானம்
தஞ்சாவூர், ஜூன் 27: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலும், வண்டிப்பேட்டையிலும் உள்ள– உரிமக் காலம் நிறைவடைந்த கடைகளுக்கு, மேலும் 3 ஆண்டுகளுக்கு உரிமத்தைப் புதுப்பித்து வழங்க வகை செய்யும் தீர்மானம் நகர்மன்றத்தில் புதன்கிழமை ஒப்புதலுக்கு வைக்கப்படவுள்ளது.
மேலும், அந்தக் கடைகளுக்கு 15 சதம் வாடகையை உயர்த்த வகை செய்யும் செய்யும் தீர்மானமும் ஒப்புதலுக்கு வைக்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் நகரில் உள்ள சிவகங்கை பூங்கா பொதுமக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது. இங்கு நீச்சல் குளம், படகு சவாரி, ரயில் வண்டி சவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் மான், மயில் உள்ளிட்ட பறவைகளும் பூங்காவில் பராமரிக்கப்படுகின்றன.
மான்களுக்கு தேவையான பசும்புல் தீவனங்களை ஓராண்டுக்கு தொடர்ந்து விநியோகிக்க நகராட்சி மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டத்தில், ரூ. 2.46 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளி அளித்தவருக்கு இதற்கானப் பணிகளை ஒப்படைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பறவைகள் மற்றும் முயல் உள்ளிட்ட சிறிய விலங்குகளுக்கு தேவையான உணவுப் பொருள்களை ஓராண்டுக்கு வழங்க ரூ. 2.30 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளி அளித்தவருக்கு, அதற்கான பணிகளை ஒப்படைப்பு செய்ய நகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானங்கள் புதன்கிழமை நடைபெறும் நகர்மன்றக் கூட்டத்தில் வைக்கப்படுகிறது.