தினகரன் 02.08.2010
தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை தீவிரம் 3 நாள் ஓய்வு, ரூ.445 செலவு
சின்னமனூர், ஆக. 2: தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யும் பணி தேனி மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த ஆபரேஷனுக்கு, ஒரு நாய்க்கு ரூ.445 செலவிடப்படுகிறது. ஆபரேஷன் செய்யப்படும் நாய்கள் பால், ரொட்டி கவனிப்புடன் மூன்று நாள் ரெஸ்ட் எடுத்துச் செல்கின்றன.
தெரு நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், அவற்றுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யும் பணி மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் தற்போது இப்பணி துவங்கியுள்ளது. மாவட்டத்தில் தேனி, போடி, சின்னமனூர், பெரியகுளம், கூடலூர், கம்பம் என ஆறு நகராட்சிகள் உள்ளன.
இவற்றில் முதற்கட்டமாக சின்னமனூர், போடி, தேனி பகுதிகளில் நாய்களுக்கு ஆபரேஷன் பணி தற்போது நடந்து வருகிறது. இதுவரை, போடியில் 279 நாய்கள், சின்னமனூரில் 158 நாய்கள், தேனியில் 30 நாய்கள் பிடிக்கப்பட்டு, ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 400 நாய்களுக்கு ஆபரேஷன் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பணி அவார்ட் டிரஸ்ட் மூலம் செய்யப்படுகிறது. ஒரு நாய்க்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய ரூ.445 செலவாகிறது. இதில், 50 சதவீதத்தை மத்திய அரசும், 50 சதவீதத்தை சம்பந்தப்பட்ட நகராட்சியும் மானியமாக அளிக்கின்றன. நாய்களுக்கு ஆபரேஷன் செய்யும் வசதி போடி கால்நடை மருத்துவமனையில் மட்டுமே இருக்கிறது. ஆகவே, பிடிபடும் நாய்கள் போடிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. அங்கு ஊசி போட்டு, ஆயத்தப்படுத்தி ஆபரேஷன் செய்கிறார்கள்.
பிறகு பால், ரொட்டி கொடுத்து ஒரு நாள் ரெஸ்ட் கொடுக்கிறார்கள். மூன்றாவது நாள், பிடித்த இடத்திலேயே அந்த நாய்கள் விடப்படுகின்றன. ஆபரேஷன் செய்ததற்கு அடையாளமாக, நாயின் காது பகுதியை லேசாக துளை இடுகின்றனர். நாய்களை விரட்டிப் பிடிக்கும்போது அவற்றுக்குக் காயம் ஏற்படும். புளுகிராஸ் அமைப்பின் மிகக்கடுமையான எச்சரிப்பின் பலனாக, இம்முறை அவற்றுக்கு சிறு காயம் கூட ஏற்படாத அளவுக்கு ஜாக்கிரதையாகப் பிடித்துச் செல்கின்றனர்.
ஷ்பெஷலிஸ்ட் டாக்டர் வருகை!
நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அவார்ட் டிரஸ்ட் அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதி மூலம் மாவட்டம் முழுவதும் தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் மற்றும் வெறிநாய் தடுப்பூசி போட்டு வருகிறோம். போடியில் மட்டுமே ஆபரேஷன் செய்யும் வசதிகள் இருக்கின்றன. பெண் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய இந்தப்பகுதியில் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் இல்லை. ஆகவே, சென்னையில் இருந்து டாக்டரை வரவழைத்திருக்கிறோம்,” என்றார்.