மாலை மலர் 11.02.2010
சென்னையில் 3 இடங்களில் நடைபாதை கடை வியாபாரிகளுக்கு ரூ.5 1/2 கோடியில் வணிக வளாகம்; மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, பிப். 11-
நடைபாதை கடை வியாபாரிகளுக்காக தியாகராய நகர் பாண்டி பஜாரில் 3 மாடி வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் முக்கிய இடங்களில் நடைபாதை கடைகள் இடையூறாக உள்ளன. சென்டிரல், எழும்பூர், பூங்கா நகர் ரெயில் நிலைய பகுதிகளில் உள்ள நடைபாதை கடைகள் அகற்றப்பட்டது. அந்த வியாபாரிகளுக்காக அல்லி குளத்தில் கடைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
தியாகராய நகரில் தியாகராயர் சாலை, உஸ்மான் சாலை, சிவப்பிரகாசம் சாலை, பனகல் பூங்கா, பாண்டி பஜார் பகுதி நடை பாதை கடை வியாபாரிகளுக்காக பாண்டி பஜாரில் ரூ. 4 கோடியே 30 லட்சம் செலவில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதில் தரை தளம் தவிர 3 மாடிகள் அமைக்கப்படுகிறது. மொத்தம் 692 கடைகள் இடம் பெறுகின்றன. இதில் லிப்ட் மற்றும் நவீன வசதிகள் இடம் பெறும். இந்த வணிக வளாகம் ஏப்ரல் மாதம் திறக்கப்படும்.
இது போல் புரசைவாக்கம், அயனாவரம் நடைபாதை வியாபாரிகளுக்காக பாலவாயல் மார்க்கெட் சாலையில் ரூ. 1 கோடியே 23 லட்சம் செலவில் 332 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்படுகிறது. இது மார்ச் மாதம் கட்டி முடிக்கப்படும்.
இது தவிர ராயபுரம், எம்.சி.சாலை, சுழல்மெத்தை சாலை நடைபாதை கடை வியாபாரிகளுக்கும், மாட்டு வண்டி கடை வியாபாரிகளுக்கும் எம்.சி. சாலையில் ரூ. 25 லட்சம் செலவில் வணிக வளாகம் கட்டப்படும். இதில் 125 கடைகள் இருக்கும்.
இவ்வாறு மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
மண்டல தலைவர் ஏழுமலை, மண்டல அதிகாரி ஞானமணி, கட்டிட துறை மேற்பார்வை என்ஜினீயர் குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.