தினகரன் 05.10.2010
சிறப்பு சாலை திட்டத்தில் தாராபடவேடு நகராட்சிக்கு ரூ3 கோடி ஒதுக்கீடுகாட்பாடி, அக்.5: சிறப்பு சாலை திட்டத்தின்கீழ் சாலைகள் அமைக்க தாராபடவேடு நகராட்சிக்கு ரூ3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தாராபடவேடு நகராட்சி கூட்டம் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா தலைமையில் நேற்று காலை நடந்தது. செயல் அலுவலர் சேகர், துணைத் தலைவர் சதீஷ்குமார் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:
ராஜா:
கடந்த கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் மினிட் புத்தகத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றியதாக உள்ளது.
தலைவர்:
மினிட் புக் திருத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது.
துணைத்தலைவர்:
இதற்கு முன்பு இருந்த செயல் அலுவலர் செய்த செலவினங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லோகநாதன்:
பன்றிக்காய்ச்சலை ஒழிக்க கொசு மருந்து அடிக்க வேண்டும். அதற்கான டீசல், பெட்ரோலை நானே வாங்கிக் கொடுக்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில், “சிறப்பு சாலை திட்டத்தில் தாராபடவேடு நகராட்சிக்கு ரூ3 கோடி ஒதுக்கீடு செய்த முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சிறப்பு சாலை திட்டத்தில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகள் போக மீதமுள்ள சாலைப் பணிகளை பொது நிதியிலிருந்து மேற்கொள்வது,
நகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு குடியிருப்பு வசதி செய்து கொடுப்பது, குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, மின் மோட்டார் இயக்குதல், பொது சுகாதார பணிகள் செய்துவரும் 15 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை அளிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.