தினமலர் 08.10.2010
நடைபாதை மேம்பாலம் 3 இடங்களில் பணி துவக்கம்
சேலம்: சேலத்தில் மூன்று இடங்களில் நடைமேடை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நேற்று துவக்க விழா நடந்தது.சேலம் மாநகர பகுதியில் நாளுக்கு நாள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சேலம் மாநகராட்சியின் பிரதான பகுதிகளில் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் புது பஸ் ஸ்டாண்டு முன்புறம், ஐந்து ரோடு, சாரதா கல்லூரி ரோடு ஆகிய பகுதிகளில் நடைபாதை மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த இம்ப்ரெஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தார் நடைபாதை மேம்பாலங்களை கட்டி கொடுக்க முன் வந்துள்ளனர்.
புது பஸ் ஸ்டாண்டு, சாரதா கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் தலா 25 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஐந்து ரோடு பகுதியில் 32 லட்சம் ரூபாய் மதிப்பிலும் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. நேற்று மூன்று இடங்களிலும் அதற்கான பூமி பூஜை நடந்தது. வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ., ராஜா, மேயர் ரேகா பிரியதர்ஷினி, மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி கூறும்போது, “” நடைபாதை மேம்பாலம் பணி முழுக்க தனியார் பங்களிப்புடன் நடக்கிறது. மூன்று இடங்களிலும் ஆறு அடி உயரம் 50 அடி நீளத்தில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. மூன்று மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.