தினமலர் 04.11.2010
பணியை சரியாக செய்யாததால் 3 மாநகராட்சி பொறியாளர்கள் சஸ்பெண்ட்
மதுரை : மதுரையில் மழைநீர் வடிகால் வாய்க்காலை சரியாக தூர் வார நடவடிக்கை எடுக்காததால், 3 உதவி பொறியாளர்கள் “சஸ்பெண்ட்‘ செய்யப்பட்டனர். மதுரையில் பாதாள சாக்கடை பணிகள் 90 சதவீதம் முடியும் தருவாயில் இருக்கின்றன. பணிகள் முழுமையாக முடிந்த இடங்களில், திறவு சாக்கடைகள் மூடப்பட்டு, பாதாள சாக்கடையுடன் வீடுகளுக்கு இணைப்பு தரப்படுகிறது. இப்பணிகளும் முடிந்து விட்டால், சாலைகளில் மழை நீர் செல்ல வழி இருக்காது. இதற்காகவே, மத்திய அரசின் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் இன்னும் இழுபறியாக இருப்பது, இன்னொரு பிரச்னையை கிளப்பி உள்ளது. குழாய், வேலையாள் கூலி போன்றவற்றுக்கு செலவழிக்க தயங்கும் சிலர், பாதாள சாக்கடை இணைப்பு பெறாமல், வீட்டு கழிவு நீரை மழைநீர் வடிகாலுக்குள் விட்டுள்ளனர். இதனால் சில பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், பல தெருக்களில் மழைநீர் வடிகாலில் குப்பை, மணல் சேர்ந்து, அடைப்பு ஏற்படுத்துகிறது. எனவே, மழைநீர் வடிகால் வாய்க்காலில் கழிவு நீரை விடுவோரை கண்டுபிடிக்கவும், வாய்க்காலை தூர் வாரி பராமரிக்க வேண்டும் எனவும் உதவி பொறியாளர்களுக்கு சென்ற வாரம் மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழ்ச்சங்கம் ரோடு, மதுரை கோட்ஸ் பாலத்தின் கீழ் பகுதி ஆகிய இடங்களில் மாநகராட்சிகள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர் வாரப்படாமல் இருந்தன. எனவே, சம்பந்தப்பட்ட வார்டு உதவி பொறியாளர்களான பெரியசாமி, திருஞானசம்பந்தம் ஆகியோரை கமிஷனர் “சஸ்பெண்ட்‘ செய்து உத்தரவிட்டார். இதே போல், தவிட்டுச்சந்தை, காமாஜர் சாலை பகுதிகளில் சேதமடைந்திருந்த சாலைகள் மராமத்து செய்யப்படாமல் இருந்தது. பணியில் அசட்டையாக இருந்ததாகக் கூறி, உதவி பொறியாளர் விஜயகுமார் என்பவரை கமிஷனர் “சஸ்பெண்ட்‘ செய்தார்.