தினகரன் 25.11.2010
பஹர்கஞ்சில் 3 விருந்தினர் விடுதிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’
புதுடெல்லி, நவ. 25: பஹர்கஞ்சில் மாநகராட்சி அனுமதி பெறாமல் இயங்கி வந்த 3 விருந்தினர் விடுதிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
பஹர்கஞ்சில் சுமார் 400 விருந்தினர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 150 விடுதிகள் மாநகராட்சி லைசென்ஸ் பெறாமல் இயங்கி வருபவை என்று தெரியவந்துள்ளது. இந்த விருந்தினர் விடுதிகளுக்கு கடிவாளம் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது.
இதன்படி, பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட விருந்தினர் இல்லங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. அதில், உடனடியாக விருந்தினர்இல்லங்களை மாநகராட்சியில் பதிவு செய்து கொள்ளவில்லை என்றால், அவை பூட்டி சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து சதர் பஹர்கஞ்ச் மண்டல துணை கமிஷனர் ரேணு ஜெகதேவ் கூறுகையில், ‘’விருந்தினர் இல்லங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். சதர் பஹர்கஞ்ச் மண்டல கட்டிடத்துறை இன்ஜினியர் சார்பில் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. உடனடியாக அவர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு பதில் மனு அனுப்ப வேண்டும். அவர்களின் பதில் மனுவுக்காக காத்திருக்கிறோம். அதன்பின் நடவடிக்கையில் இறங்குவோம்” என்றார்.
இந்நிலையில், முதல்கட்டமாக கடந்த 18ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்ட விடுதிகளில் 18 விடுதிகளில் 3 விடுதிகளின் உரிமையாளர்கள் அனுப்பியிருந்த பதிலில் திருப்தி இல்லாததை தொடர்ந்து அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கலி ராம்நாத் பட்வாவில் உள்ள வேத் பேலஸ், வேத் ஹான் ஆகிய விடுதிகளும், தாரிபா பானில் உள்ள ஓட்டல் டி.ஆர்.எஸ். ஆகியவையும் சீல் வைக்கப்பட்ட விடுதிகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனுமதி பெறாமல் இயங்கி வரும் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் இடம்பெற்றுள்ள ஓட்டல் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “நாங்கள் டெல்லி மாஸ்டர் பிளான் & 2021ல் குறிப்பிட்டுள்ள சிறப்பு பகுதியில் உள்ளோம். இதனால் டெல்லி மாநகராட்சியிடம் நாங்கள் பதிவு செய்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. மாஸ்டர் பிளானுக்கு அனுமதி அளிக்கும் வகையில் இப்போதுள்ள நிலை அப்படியே தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.