தினமணி 07.09.2009
சலவன்பேட்டையில் 3 இடங்களில் குடிநீர்த் தொட்டிகள் திறப்பு
வேலூர், செப். 6: வேலூர் சலவன்பேட்டையில் 3 இடங்களில் ரூ.3.30 லட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டிகள் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தது. இதில் வேலூர் மாநகராட்சிக்கு மட்டும் ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இதில் சலவன்பேட்டை 29-வது வார்டில் 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. இங்கிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பிளாஸ்டிக் தொட்டியில் நிரப்பி, அந்தந்தப் பகுதியிலேயே விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவை தலா ரூ.1.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டன.
திருப்பூர் குமரன்நகரில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியை மாவட்ட ஆட்சியர் செ. ராஜேந்திரன் திறந்து வைத்தார். இதில் மேயர் ப. கார்த்திகேயன், திமுக மாவட்ட அவைத்தலைவர் தி.அ. முகமது சகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆட்சியர் முற்றுகை: நிகழ்ச்சியை முடித்துகொண்டு புறப்பட்ட மாவட்ட ஆட்சியரின் காரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
எங்கள் பகுதிக்கு தண்ணீர் போதாது, எனவே, இதே தெருவில் மேலும் ஒரு குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
போதிய நீராதாரம் கிடைக்கும் பட்சத்தில் மேலும் ஒரு குடிநீர் தொட்டி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்ததும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.