தின மணி 19.02.2013
திருச்சி மாநகராட்சியில் கோடைக்கால குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ. 3 கோடி அரசிடமிருந்து நிதியுதவி பெற்று தேவையான இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக மேயர் அ. ஜெயா தெரிவித்தார்.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின்போது அவர் இதைத் தெரிவித்தார்.
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் ரூ. 18 கோடியில் சாலை மேம்பாடு மற்றும் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 11 கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அது தொடர்பான விவரங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் மேயர் அறிவுறுத்தினார். துணை மேயர் ம. ஆசிக் மீரா, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் எஸ். அருணாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.