புதிய நகர்ப்புற அபிவிருத்தித் திட்டம் 3 மாதங்களில் தயாராகும்
நகர்ப்புற அபிவிருத்தித் திட்டத்தைத் திருத்தி புதிய திட்டத்தை 3 மாதங்களில் தயாரிக்க கோவை மாநகராட்சியில் புதன்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சியில் புதன்கிழமை நடந்தது. இதுகுறித்து மேயர் செ.ம. வேலுசாமி கூறியது:
கல்விச் சாலைகள், மருத்துவமனைகள் கோவையில் அதிகமாக உள்ளதால், பிற மாநிலங்களில் இருந்து இங்கு அதிகமானோர் வருகின்றனர். இதற்குத் தேவையான கட்டுமானங்கள், போக்குவரத்து வசதி, குடிநீர், தெருவிளக்கு ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.
இவற்றை மேம்படுத்தும் வகையில் நகர அபிவிருத்தித் திட்டத்தை வடிவமைக்க வேண்டும். நீர்நிலைகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றார் மேயர் செ.ம.வேலுசாமி.
ஆணையாளர் (பொறுப்பு) சு.சிவராசு, துணை மேயர் லீலாவதி உண்ணி, தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாகி பாஸ்கரன், பணிகள் குழுத் தலைவர் அம்மன் அர்ச்சுனன், நிதிக்குழுத் தலைவர் பிரபாகரன், கணக்குகள் குழுத் தலைவர் கணேசன், மாநகரப் பொறியாளர் கருணாகரன், கண்காணிப்புப் பொறியாளர் கணேஷ்வரன், தனியார் ஆலோசகர்கள் பி.ஜே.நாயுடு, மீனாட்சி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.