பிறப்பு–இறப்பு சான்றிதழ் 3 நாளில் வீடுதேடி வரும் சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் தகவல்
சேலம் மாநகராட்சி மேயர் எஸ்.சவுண்டப்பன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
சேலம் மாநகராட்சியில் நாள்தோறும் பிறப்பு–இறப்பு சான்றிதழ்கள் கோரி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.இவ்விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு 3 தினங்களுக்குள் பிறப்பு –இறப்பு சான்றிதழ்கள், பெயர்பதிவு சான்றிதழ்கள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கப்பெறும் வகையில் அவர்களின் வீடுதேடி தபாலில் அனுப்பப்பட்டு வருகிறது.
பொதுமக்களை ஏமாற்றி சான்றிதழ் பெற்றுத் தருவதாக சில சமூக விரோதிகள் மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள்ளும் வெளியிலும் நடமாடுவதாக தகவல் கிடைத்ததையொட்டி அலுவலக வளாகத்திற்குள் அத்தகைய சமூக விரோதிகள் மற்றும் இடைத்தரகர்கள் நுழையா வண்ணம் தடைசெய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதைபோன்ற நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். பொதுமக்கள் நேரடியாக மனுக்களை அலுவலகத்தில் வழங்கினால் அடுத்த நாளே சான்றிதழ்கள் தபால் மூலம் அனுப்பப்படும். சான்றிதழ்கள் பெற கட்டவேண்டிய கட்டணம் எவ்வளவு என்பது குறித்து ஒவ்வொரு மண்டல அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகத்தில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. நேரடியாக அலுவலகத்திற்கு வந்து மனுக்களை வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுத்து சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.