தினமணி 02.07.2013
தினமணி 02.07.2013
அனுமதியின்றி கட்டப்பட்ட 3 மாடி கட்டடத்துக்கு சீல்
கோவையில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 3 மாடி கட்டடத்துக்கு மாநகராட்சியின் நகரமைப்பு அலுவலர்கள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.
கோவை கிராஸ்கட் சாலையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவிக்குச்
சொந்தமான கட்டடம் உள்ளது. இக் கட்டடம் தரைத்தளத்தில் இருந்து 4-ஆவது தளம்
வரை கட்டப்பட்டது. 4-ஆவது தளம் கடந்த 2010-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டதாகத்
தெரிகிறது.
தரைத் தளத்தில் இருந்து மூன்றாவது தளம் வரை சுமார் 20 ஆயிரம் சதுர
அடிக்கும் மேல் இருக்கும். இக் கட்டடத்துக்கு மாநகராட்சியிடம் இருந்தோ
உள்ளூர் திட்டக் குழுமத்தில் இருந்தோ எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை
என்று கூறப்படுகிறது. இதையடுத்து மாநகராட்சியின் சார்பில் நோட்டீஸ்
கொடுக்கப்பட்டது.
கடந்த 2007-ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடமாக இருந்தால், உரிய
அனுமதி பெறாமல் இருந்தாலும் அதை முறைப்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு
உத்தரவிட்டிருந்தது. அதிகபட்சமாக 50 சதவீதம் வரை விதிமீறல்கள் இருந்தால்,
அதை முறைப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இக்கட்டடம் முழுவதுமே
விதிகளை மீறிக் கட்டப்பட்டதால் அதிகாரிகள் முறைப்படுத்த மறுத்துவிட்டனர்.
கட்டடம் முழுவதையும் ஜவுளிக் கடைக்கு வாடகைக்கு விட்டதாகத் தெரிகிறது.
கடையின் உள்புறத்தை முழுவதுமாக மாற்றும் பணி நடந்து வந்தது. இவ்வாறு
மாற்றுவதற்கும் மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக் குழுமத்திடம் எவ்வித
அனுமதியும் பெறவில்லை.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை காலையில் தரைத் தளத்தில் இருந்து 3-வது தளம் வரை சீல் வைத்தனர்.