தினத்தந்தி 02.09.2013
திருச்சி மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியை அழிக்க 3 நாட்கள் தூய்மைப்படுத்தும் பணி கலெக்டர் தகவல்
திருச்சி மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியை அழிக்க 3 நாட்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்
டெங்கு கொசு உற்பத்தி ஆகாமல் அழிப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் எடுப்பது பற்றிய மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்
நடைபெற்றது. கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமை தாங்கி பேசியதாவது:–
மழைக்காலம் தொடங்க உள்ளதால் கொசு உற்பத்தி
ஆகாமல் கட்டுப்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். அந்தவகையில்,
வருகிற 3–ந் தேதி முதல் 5–ந் தேதி வரை மாவட்டம் முழுவதும், உள்ளாட்சி
பிரதிநிதிகள் தலைமையில் குக்கிராமங்கள் முதல் மாநகராட்சி வரை அனைத்து
பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் பணி செய்யப்பட உள்ளது.
கொசு அழிக்கும் பணி
இப்பணியின் போது குப்பை, டயர், பிளாஸ்டிக்
கப், பூந்தொட்டி, ஆட்டுக்கல், தேங்காய் ஓடு, முட்டை ஓடு போன்றவற்றில்
தண்ணீர் தேங்காமல் இருக்க அப்புறப்படுத்தப்படும். மேலும், அனைத்து மேல்நிலை
குடிநீர் தொட்டி மற்றும் தரைதள தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட உள்ளது.
இப்பணியில் பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களும் முழுமையாக
ஈடுபட்டு கொசு உற்பத்தி ஆகாமல் இருக்க அதனை அழிக்கும் பணியில் முழுமையாக
ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், இணை இயக்குநர் (சுகாதார
பணிகள்) டாக்டர் மனோகர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சேரன்,
அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் வள்ளிநாயகம், கலெக்டரின் நேர்முக
உதவியாளர் (வளர்ச்சி) தெய்வசிகாமணி, அரசு மருத்துவக்கல்லூரி நோய்
தடுப்புத்துறை தலைவர் டாக்டர் பரிமளா தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.