தினமலர் 12.10.2013
3 கடைகளில் ஒரு டன் கேரி பேக் பறிமுதல் : சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி
திருப்பூர் : திருப்பூர் சிக்கண்ண செட்டியார் வீதியில் மூன்று கடைகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் நேற்று ஆய்வு செய்து, ஒரு டன் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத் துறையினர், நேற்று காலை, சிக்கண்ண செட்டியார் வீதியில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினர். பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனை செய்யும் மூன்று கடைகளில் மட்டும், ஒரு டன் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், பாதியளவு, மறு சுழற்சி செய்த கலர் கேரி பேக்குகளாவும், 17 மைக்ரானுக்கும் குறைவாகவும் இருந்தது.
அதிர்ச்சி அடைந்த சுகாதாரத் துறையினர், அதிக அளவு பிளாஸ்டிக் பொருட்கள் இருந்த, மருதம் பிளாஸ்டிக் நிறுவனத்துக்கு 3,000 ரூபாய், மற்ற இரு கடை உரிமையாளர்களுக்கு தலா 1,500 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், ஏழு கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்ததோடு, பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர்.
கடும் நடவடிக்கை இல்லாததே காரணம்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினமும் 550 டன் குப்பை சேகரமாகிறது. இதில், 350 டன் வரை பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளன. மண்ணுக்கும், சுற்றுஸ் சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை, திருப்பூர் நகர பகுதிகளில் அபரிமிதமாக பயன்படுத்தப்படுவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. 40 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பில், கடுமையான நடவடிக்கை இல்லாததே இதற்கு காரணம்.
அதிகாரிகள் ஆய்வு செய்தாலும், குறைந்த தொகையே அபராதமாக விதிக்கப்படுவதால், சில கடைக்காரர்கள் பொருட்படுத்துவதில்லை. எத்தனை முறை “ரெய்டு’ நடத்தினாலும், மீண்டும், மீண்டும் அதே தவறுகளை தொடர்கின்றனர். கடைகளுக்கு “சீல்’ வைத்தல், கிரிமினல் நடவடிக்கை, சிறை தண்டனை விதித்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ள, மாநகராட்சியோ அல்லது மாவட்ட நிர்வாகமோ முயற்சிப்பதில்லை.
நகர் நல அலுவலர் செல்வகுமார் கூறுகையில்,””பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
40 மைக்ரானுக்கு குறைவானது என்பதை உறுதி செய்ய, கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
“தற்போது பறிமுதல் செய்யப்பட்டவையும் அனுப்பி வைக்கப்படும். குறைவான மைக்ரான் என உறுதி செய்ததும், பிளாஸ்டிக் தடை சட்டத்துக்கு எதிராகவும், பொது சுகாதார சட்டத்தின் கீழும் வழக்கு தொடரலாம். அதற்கு, மன்ற அனுமதி பெற்று, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
கமிஷனர் செல்வராஜிடம் கேட்டபோது, “”எத்தனை முறை சோதனை நடத்தினாலும், மீண்டும் மீண்டும் விற்பனை செய்து, நகரை நாசம் செய்து வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை திருப்பூரில் இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி வருகின்றனர். 40 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துக் கூடாது என்பது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.
விற்பனையாளர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும், கடும் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்,”என்றார்.