தினமலர் 21.08.2012
விரிவாக்கப் பகுதிகளில் ரூ.30 கோடியில் 100 புதிய பூங்காக்கள்
சென்னை:மூலிகை செடியின் நறுமணம், பண்பலை வானொலியின் இசை ரீங்காரம், சிறார் விளையாட வசதியுடன், சென்னை விரிவாக்கப் பகுதிகளில், 30 கோடி ரூபாயில், புதிதாக, 100 பூங்காக்கள் அமைய உள்ளன. மாநகராட்சி, இதற்கான ஒப்பந்தத்தை கோரியுள்ளது.சென்னை விரிவாக்கப் பகுதிகளில், புதிதாக, 100 பூங்காக்கள் அமைக்கப்படும் என, சமீபத்திய மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, பூங்கா அமைக்க வேண்டிய இடங்களை தேர்வு செய்யும் பணி நடந்தது. இதன்படி, 191 இடங்கள் கண்டறியப்பட்டன. இப்பணிகள் முடிந்த நிலையில், விரிவாக்கப் பகுதியில் உள்ள, எட்டு மண்டலங்களிலும், முதற்கட்டமாக, 100 பூங்காக்கள் அமைக்கப்படும் என, அறிவித்துள்ளது.
திருவொற்றியூர் – 7 இடங்களிலும், மணலி -6, மாதவரம் -17, அம்பத்தூர் – 22, வளசரவாக்கம் – 18, ஆலந்தூர் – 9, பெருங்குடி – 12, சோழிங்கநல்லூர் -9 இடங்களிலும், பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான, இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.இப்பணிகள் அறிவிப்போடு முடங்கிவிடுமோ என எதிர்பார்த்த நிலையில், பூங்காக்களை அமைக்க, மாநகராட்சி, பல்வேறு கட்டமாக ஒப்பந்தம் கோரியுள்ளது. இதில், பிரத்யேக அனுபவம் உள்ளோர் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் திறப்பு, இம்மாதம் 24, 31, அடுத்த மாதம் 7ம் தேதிகளில், நடக்க உள்ளது.30 கோடி ரூபாய்மொத்தம், 100 பூங்காக்களை அமைக்க, 30 கோடி ரூபாய் செலவாகும் என, திட்டமிடப் பட்டு உள்ளது.
மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து, இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப் படும். பூங்காவின் பரப்பிற்கு ஏற்ப, ஐந்து லட்சம் ரூபாயில் இருந்து, 50 லட்சம் ரூபாய் வரை செலவிடப்படும் என, தெரிகிறது.சீரழியும் பூங்காக்கள்மாநகராட்சியில் ஏற்கனவே, 260 பூங்காக்கள், 103 சாலை மையத்தடுப்பு பூங்காக்கள், 154 போக்குவரத்து தீவு பூங்காக்கள் பராமரிக்கப்படுவதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால், குறிப் பிட்ட சில பூங்காக்கள் தவிர, பல சாலையோர பூங்காக்கள், போதிய பராமரிப்பின்றி, மிக மோசமான நிலையிலேயே உள்ளன.மெரீனா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தில், நேப்பியர் பாலம் முதல், கலங்கரை விளக்கம் வரை, 3 கி.மீ., தூரத்திற்கு, 17 கோடி ரூபாயில், பூங்கா அமைக்கப் பட்டது.
இது, பராமரிப்பு இல்லாமல், பல்வேறு பகுதிகளிலும், புற்கள் காய்ந்து, பொட்டல் தரையாக மாறிவருகிறது.மாநகராட்சி சொல்வது என்ன?இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “”விரிவாக்கப் பகுதி மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, பிரத்யேகமாக அங்கு, 100 பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, இன்னும் இரண்டு மாதத்திற்குள் பணிகள் துவங்கும்.தற்போதுள்ள பூங்காக்கள், இதர பசுமைப் பகுதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. சி.எம்.டி.ஏ., ஒப்படைக்கும் திறந்த வெளி நிலங்களில், பூங்கா, சிறுவர் விளையாட்டுத் திடல்கள் அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,” என்றனர்.
கூடுதல் வசதிகள் :
வழக்கமான செடிகள் தவிர, மூலிகைச் செடிகள் அதிகம் இடம்பெறும்.பண்பலை ஒலிபரப்பப்படும். பூங்காவிற்கு, இயற்கை காற்றை சுவாசிக்க வருவோர், பாட்டு, நிகழ்வுகளை கேட்டு ரசிக்கலாம்.கடிகாரங்கள் நிறுவப்படும்.சிறுவர்கள் விளையாட, தேவையான வசதிகள் இருக்கும்.