தினமணி 12.04.2010
தேரூரில் ரூ. 30 லட்சத்தில் புதிய பேரூராட்சிக் கட்டடம் திறப்பு
கன்னியாகுமரி, ஏப். 11: தேரூரில் ரூ. 30 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தை மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் சனிக்கிழமை திறந்துவைத்தார்.
விழாவுக்கு, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார். தேரூர் பேரூராட்சித் தலைவர் முத்து வரவேற்றார். வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் ஜி.எம். ஷா, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சோமு, மயிலாடி பேரூராட்சித் தலைவர் சாய்ராம் பேசினர்.
புதிய கட்டடத்தைத் திறந்துவைத்து அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தேரூர் பேரூராட்சியில் மட்டும் ரூ. 3 கோடியே 30 லட்சம் செலவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும், ரூ. 40 லட்சம் செலவில் திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப் பகுதியில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலத்தில் தேரூர் பேரூராட்சி தன்னிறைவு பெற்றதாகத் திகழும் என்றார் அவர்.
மாவட்ட திமுக பொருளாளர் பொன். சின்னத்துரை, மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் அபுல்கலாம் ஆஸôத், அழகப்பபுரம் பேரூராட்சித் தலைவர் டேவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்கள்–செய்தித் தொடர்பாளர் தமிழ்இனியன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். தேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் சேம்ராஜ் நன்றி கூறினார்.