தினமணி 06.07.2010
கோவில்பட்டி, திருச்செந்தூரில் மின் மயானம் அமைக்கும் பணி: ஜூலை 30-க்குள் நிறைவடையும்
தூத்துக்குடி, ஜூலை 5: கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூரில் மின் மயானம் அமைக்கும் பணி இம்மாதம் 30-ம் தேதிக்குள் முடிவடையும் என, மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
தூத்துக்குடியில் மின் மயானம் செயல்பட தொடங்கியுள்ளது. அடுத்ததாக கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூரில் மின்சார மயானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் இம்மாதம் 30-ம் தேதிக்குள் முடிவடையும். பணிகளை வேகப்படுத்துமாறு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி– கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு இதுவரை அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை. அதிகாரபூர்வ தகவல் வந்தால் மாவட்ட நிர்வாகத்தால் எந்த வசதி தேவையோ அவைகள் செய்து கொடுக்கப்படும்.
தூத்துக்குடி ஜார்ஜ் சாலை புல்தோட்டம் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எந்தவித சுற்றுச்சூழல் மாசும் விளையாது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
இந்த சுத்திகரிப்பு நிலையம் ரூ. 18.5 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு கடலில் விடப்படும். அடியில் தேங்கும் கழிவு உரமாக பயன்படுத்தப்படும்.
இது தொடர்பாக பொதுமக்களுக்கு எந்தவித சந்தேகம் இருந்தாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ அல்லது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திலோ சென்று தெரிந்து கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
முன்னதாக, தூத்துக்குடி–அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்கள் 4 பேருக்கு ரூ. 4,17,131 இழப்பீட்டுத் தொகையை மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் வழங்கினார்.
இதேபோன்று மாவட்டத்தில் அவுரி மூலிகை பயிர் சாகுபடி செய்துள்ள 10 விவசாயிகளுக்கு ரூ. 1.20 மானியம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லதா, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் செ. ஜோசப் கருணாநிதி, உதவி இயக்குநர்கள் எம். கனகராஜ், மா.சி. மோகன்ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.