தினகரன் 27.10.2010
நவம்பர் 30க்குள் குடிநீர் கட்டண பாக்கியை செலுத்த மாநகராட்சி கெடு
மும்பை, அக். 27: குடிநீர் கட்டண பாக்கியை நவம்பர் 30ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.
மும்பையில் குடிநீர் விநியோகத்துக்கான கட்டணத்தை மாநகராட்சிக்கு செலுத்தாமல் பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் லட்சக்கணக்கில் பாக்கி வைத்துள்ளன. குடிநீர் கட்டண பாக்கியாக ஏற்கனவே நிலுவையில் உள்ள தொகையுடன் ரூ18,97,999 அதிகரித்துள்ளது என்று தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
மேலும் புள்ளிவிவர அடிப்படையில், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் கட்டண பாக்கியை விட பொதுமக்களிடம் வர வேண்டிய கட்டண பாக்கி தொகை குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. வீடுகளுக்கான குடிநீர் கட்டண பாக்கியில் நிலுவை தொகை ஏற்கனவே உள்ள தொகைக்கு ரூ10,46,070 ஆக அதிகரித்துள்ளது.
வீடுகளுக்கான குடிநீர் கட்டண பாக்கியை பொதுமக்கள் பொறுப்பு உணர்ந்து செலுத்தி வருவதும் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குடிநீர் கட்டண பாக்கி வைத்திருப்பவர்கள் அவற்றை வரும் நவம்பர் மாதத்துக்குள் செலுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.
குடிநீர் கட்டண பாக்கி குறித்த விவரத்தை தகவல் உரிமை அறியும் சட்டம் மூலம் வெளிபடுத்திய மிலிந்த் முலே இது பற்றி கூறுகையில், ‘’ பொதுமக்களிடம் இருந்து குடிநீர் கட்டண பாக்கியை எப்படி வசூலிக்க வேண்டும் என்பது மாநகராட்சிக்கு தெரிகிறது. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
இதே அணுகுமுறையை தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களிடத்திலும் கடைப்பிடித்தால் குடிநீர் கட்டண பாக்கி வசூலாகும்” என்றார்.