டெங்குவை தடுக்க நடவடிக்கை 300 பேர் கொண்ட குழு அமைப்பு
சேலம்: சேலம் மாநகர பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா உள்ளிட்டவற்றை தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 300 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, வீடு வீடாக சோதனை நடத்தப்படுகிறது.
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக, விட்டுவிட்டு பருவ மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், தேங்கிய மழைநீர் மற்றும் குளிர்ந்த சீதோஷ்ணம் உள்ளிட்டவைகளால், டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதனால், மழைக்கால தடுப்பு நடவடிக்கையாக, சேலம் மாநகராட்சியில், 300 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை மண்டலங்களுக்கு தலா, 75 பேர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, உரிய பயிற்சி வழங்கப்பட்டு, தினக்கூலி அடிப்படையில், இப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து, வீடு வீடாக சென்று, தேங்கிய மழைநீர் மற்றும் வைரஸ் பரவும் விதம் குறித்தும், வைரஸ் நோயால் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாநகர நல அலுவலர் அர்ஜூன்குமார் கூறியதாவது:
கடந்த ஆண்டில் டெங்கு வைரஸ் கண்டறிந்த இடங்கள், காய்ச்சல் உள்ள பகுதிகள், டெங்கு புழுக்கள் உருவாகும் வாய்ப்பு உள்ள இடங்கள் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டு, அப்பகுதிகளில், தடுப்புக்குழுவினர் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொசுப்புழு உருவாகாமல் தடுக்க மருந்து தெளிப்பது உள்ளிட்டவற்றை செய்வதோடு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவர். இம்மாதம் முழுவதும் இக்குழுவினர் இப்பணிகளில் ஈடுபட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.