தினமணி 18.02.2010
கோவையில் உள்கட்டமைப்பு பணிக்கு ரூ.300 கோடி நிதி: முதல்வர் கருணாநிதி
சென்னை, பிப்.17: “செம்மொழி மாநாடு நடைபெற உள்ள கோவை மாநகரில் உட்கட்டமைப்புப் பணிகள் ரூ.300 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன‘ என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அனைத்துக் குழுக்களின் சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
செம்மொழி மாநாடு நடைபெற்ற உள்ள கோவை மாநகரில் உள்கட்டமைப்பு பணிகள் ரூ.300 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக, அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.59.85 கோடியும், செம்மொழி பூங்கா அமைக்க ரூ.20 கோடியும், மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரப் பணிக்கு ரூ.10 கோடியும், மின் கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.56 கோடியும், சாலை மேம்பாடு உள்ளிட்ட உட்கட்டமைப்புக்கு ரூ.104.40 கோடியும், கொடீசியா உள் அரங்கப் பணிக்கு ரூ.9.30 கோடியும், மாநாட்டு பந்தல் பணிக்கு ரூ.7.71 கோடியும், ஊர்வலம், கலை நிகழ்ச்சிகளுக்கு ரூ.5.85 கோடியும், கண்காட்சி அமைக்கும் பணிக்கு ரூ.1.60 கோடியும், விருந்தோம்பலுக்கு ரூ.4.95 கோடியும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மேம்பாட்டுக்கு ரூ.4.25 கோடியும், மருத்துவ வசதி, சிறப்பு மலர் மற்றும் போக்குவரத்து வசதிக்கு ரூ.10.85 கோடி என ஏறத்தாழ் 300 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார் முதல்வர் கருணாநிதி.