மாலை மலர் 02.03.2010
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிக்க 300 நவீன கருவிகள்; மேயர் அறிமுகப்படுத்தினார்
சென்னை, மார்ச். 2-
சென்னை மாநகராட்சியில் மா.சுப்பிரமணியன் சொத்துவரி வசூலிப்பதற்காக நவீன கருவிகளை அறிமுகப்படுத்தினார். அப்போது பேசியதாவது:-
சென்னை மாநகராட்சியில் 2006ம் ஆண்டு புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு, சொத்து வரியை உயர்த்தாமல் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. 2008-2009ம் ஆண்டு ரூ.300 கோடி வசூல் செய்ய திட்டமிட்டு, ரூ.323.80 கோடி வசூல் செய்யப்பட்டது.
நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.350 கோடி இலக்கில் இதுவரை ரூ.301 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை காட்டிலும் தாண்டி செல்லக்கூடிய நிலை உள்ளது.
சென்னை மாநகராட்சியில் இன்று இந்தியாவிலேயே முதல்முறையாக சொத்து வரியை நவீன முறையில் வசூலிப்பதற்காக இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. அதில் ஒன்று அனைத்து வரிவசூலிப்பவர்களுக்கும் கையடக்க வரி வசூல் கருவி இது 300 பேருக்கு ரூபாய் 94 லட்சம் செலவில் இன்று வழங்கப்படுகிறது. இதன் மூலமாக சொத்துவரி வசூலிப்பதால் எந்த எந்த அரையாண்டு காலத்திற்கான சொத்துவரி வசூல் செய்யப்படுகிறது என்கிற விவரம் உடனுக்குடன் கணினியில் பதிவு செய்யப்பட்டு, சொத்து வரி செலுத்துவோர்க்கு அப்பொழுதே ரசீதும் வழங்கப்படுகிறது.
மற்றொரு திட்டமாக சொத்துவரி வசூலிக்கும் முறையை ஒழுங்குபடுத்தவும், தரவுதளத்துடன் தடையில்லா இணைப்புடன் கூடிய வரி வசூலிக்கும் முறையை அமுல்படுத்த தொலைபேசி மூலம் ஒருங்கிணைந்த சேவைக்கான வசதி ஐ.வி.ஆர்.எஸ். அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி களப்பணியினை மேற்கொள்ளும் உதவி வருவாய் அலுவலருக்கு அலுவலக வாகன வசதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் பொருட்டு அனைத்து உதவி வருவாய் அலுவலருக்கும் கைப்பேசி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் ரூபாய் 85 கோடி தொழில்வரியாக வசூலிக்கப்பட்டது போல், தற்பொழுது 101 கோடி ரூபாய்க்கு அதிகமாக தொழில் வரி வசூல் செய்யப்பட்டு, சாதனை புரியப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மேலும் 50 கோடி ரூபாய் தொழில்வரி வசூல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
நிகழ்ச்சியில் ஆணையாளர் ராஜேஷ் லக்கானி, மாநகராட்சி ஆளுங்கட்சித்தலைவர் ராமலிங்கம், எதிர்க் கட்சித்தலைவர் சைதை ரவி, நிலைக்குழுத்தலைவர் ராதா சம்பந்தம், வருவாய் அதிகாரி ராமநாதன், கூடுதல் வருவாய் அதிகாரி கோபால ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.