தினகரன் 31.08.2012
மாநகராட்சியின் புதிய மண்டலங்களில் ரூ3000 கோடியில் வெள்ள தடுப்பு பணி
சென்னை, : மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புதிய மண்டலங்களில் ரூ3000 கோடி மதிப்பீட்டில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக 1,055 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய்கள் அமைக்கப்படுகின்றன. இந்த வெள்ளத்தடுப்பு கால்வாய் கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம், கோவளம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளன. அதில், கொசஸ்தலையாறு பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு அதனுடன் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மண்டலங்கள் மற்றும் அம்பத்தூரில் சில மண்டல பகுதிகள் இணைக்கப்படுகிறது. அடையாறு ஆற்றுப்பகுதியில் வளசரவாக்கம், ஆலந்தூர் ஆகிய மண்டலங்களும், அம்பத்தூர், வளசரவாக்கம் மண்டலத்தின் சில பகுதிகள் கூவம் ஆற்றிலும் இணைக்கப்படுகிறது.
புதிய வெள்ளத்தடுப்பு திட்டத்தில் கோவளம் ஆற்றுப்படுகையில் சோழிங்கநல்லூர், பெருங்குடி ஆகிய மண்டலங்கள் பயன்பெறும். புதிதாக இணைக்கப்பட்ட 8 மண்டலங்களில் குடியிருப்புவாசிகளின் கருத்துகள் கேட்கப்பட்டு தேவையான மாற்றங்கள் செய்யப்படும். இறுதி அறிக்கை அநேகமாக செப்டம்பர் 20ம் தேதி சமர்ப்பிக் கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 7 மண்டலங்களில் ஜவர்ஹர்லால் நேரு நகர் புனரமைப்பு திட்டத்தின் கீழ் 505 கி.மீ. நீளத்திற்கு வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.புதிதாக சேர்ந்த மாநகராட்சி பகுதியில் 2,752 கி.மீ. நீளம் சாலைகள் இணைந்துள்ளன. ஆனால், 682.4 கி.மீ. தொலைவிற்கு மட்டும் வெள்ளநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 8 மண்டலங்களில் அம்பத்தூரில் தான் மிக அதிகளவில், அதாவது 177.95 கி.மீ. நீளத்திற்கு வெள்ளநீர் தடுப்பு மற்றும் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவொற்றியூரில் மிகவும் குறைந்த அளவே இந்த பணி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி, உத்தண்டி ஆகிய பேரூராட்சிகள் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட போதிலும் கூட இங்கு வெள்ள தடுப்பு கால்வாய் பணிகள் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் கூறினர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘புதிய மண்டலங்களில் மேலும் ஏராளமான பகுதிகள் பயனடையும் வகையில் வெள்ளநீர் கால்வாய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றனர்.