மாநகராட்சியில் 3000 பேருக்கு நகர்ப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி நகர்ப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 3000 பேருக்கு வழங்க உள்ளதாக திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி பேசினார்.
திருப்பூர் மாநகராட்சி வேலம்பாளையம் முதலாவது மண்டல அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நகர்ப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது.
முகாமிற்கு திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி தலைமை தாங்கி, நகர்ப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ், முதலாவது மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கி, மேயர் விசாலாட்சி பேசுகையில், ‘திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, நகர்ப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இந்த திட்டத்தின் மூலம் 920 பேருக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, இத்துடன் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்பட்டுள்ளது.
தற்போது, 3000 பேருக்கு பயிற்சியளித்து, வங்கி கடனுதவி பெற்று தந்து, சுய வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படவுள்ளது. கடந்த காலங்களில் பெண்கள் ஆண்களை சார்ந்தே வாழ வேண்டி இருந்தது. இப்போது அவ்வாறு இல்லாமல், அனைத்து துறைகளிலும் பெண்கள் சமூக பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றனர். தொழில் பயிற்சிகளான கணினி, அழகுகலை, நர்சிங், தையல்கலை போன்ற 10க்கும் மேம்பட்ட பயிற்சிகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைய வேன்டும்‘ என்றார்.
இதில்மாநகராட்சி கவுன்சிலர்கள் ஈசுவரன், செந்தில்குமார், சுப்பு, சமுதாய அமைப்பாளர்கள் மங்கயர்கரசி, தமிழ்ச்செல்வி, செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் 300க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர், மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். நிறைவில் மாநகராட்சி வேலம்பாளையம் முதலாவது மண்டல உதவி ஆணையாளர் சபியுல்லா நன்றி கூறினார்.