தினமணி 26.08.2014
மாநகராட்சியில் குடிநீர் இணைப்புக்கு ஆன்லைனில் 3,000 விண்ணப்பங்கள்
தினமணி 26.08.2014
மாநகராட்சியில் குடிநீர் இணைப்புக்கு ஆன்லைனில் 3,000 விண்ணப்பங்கள்
கோவை மாநகராட்சியில் குடிநீர் இணைப்புக்கு ஆன்லைனில் முதல் நாளில் சுமார் 3,000 விண்ணப்பங்கள் திங்கள்கிழமை பெறப்பட்டன.
கோவை மாநகராட்சிப் பகுதியில் கடந்த ஜனவரி முதல் புதிய குடிநீர்
இணைப்புகள் வழங்கப்படவில்லை. ஜனவரிக்கு மேல் வறட்சிக் காலம் என்பதாலும்,
இருக்கும் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த வேண்டும் என்று மாமன்ற
உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததாலும், புதிய குடிநீர் இணைப்புகள்
வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி, பில்லூர்
அணைகள் நிரம்பியதால், புதிய குடிநீர் இணைப்புகள் தர மாநகராட்சி நிர்வாகம்
தீர்மானித்தது. இதையடுத்து, ஆன்லைனில் மட்டும் விண்ணப்பங்கள் பெறப்படும் என
அறிவிக்கப்பட்டது. இதில் சில பிரச்னைகள் இருந்ததால், ஆன்லைனில்
விண்ணப்பிப்பதற்காகத் தனியாக மென்பொருள் உருவாக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு
நிலையிலும் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி செல்லும் வகையில் மென்பொருள்
உருவாக்கப்பட்டிருந்தது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, எந்தக் கட்டடத்துக்கு குடிநீர்
இணைப்புத் தேவையோ அந்தக் கட்டடத்தின் வரிவிதிப்பு எண், தொலைபேசி அல்லது
அலைபேசி எண், இமெயில் ஐடி, கட்ட வேண்டிய தொகை, செலுத்த வேண்டிய வரி ஆகியவை
தொடர்பாக விண்ணப்பதாரருக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். இது
தவிர, விண்ணப்பதாரருக்கு தபால் மூலமாகவும் தகவல் அளிக்கப்படும். 30
நாள்களுக்குள் பணி உத்தரவு வழங்கப்பட உள்ளதாகவும் மாநகராட்சி ஆணையாளர்
க.லதா தெரிவித்தார்.
குடிநீர் இணைப்பு வழங்குவதில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதற்காகவே இம்முறை கையாளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
குடிநீர் இணைப்பு வழங்க திங்கள்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பம்
பெறப்பட்டது. முதல் நாளான திங்கள்கிழமை சுமார் 3000 பேர்
விண்ணப்பித்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.