தினகரன் 26.10.2010
ரூ. 30.44 கோடியில் குடிநீர் திட்டம் கொடைக்கானல் நகராட்சியில் அதிகாரிகள் குழு ஆய்வு
கொடைக்கானல், அக். 26: கொடைக்கானல் நகராட்சி யில் ரூ.30.44 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் துவங்குவது குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது.
கொடைக்கானல் நகராட்சியில் 32 ஆயிரத்து 969 பேர் வசிக்கின்றனர். அப்சர்வேட்டரியில் பழைய நீர்தேக்கம் மற்றும் புதிய அணை மூலம் கொடைக்கானல் நகராட்சி மக்களுக்கு நாளொன்றுக்கு நபருக்கு 90 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக பூம்பாறை ரோட்டில் நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கொடைக்கானல் நகராட்சியில் 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. ஏப், மே மாதங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு விடும். நகர மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளின் குடிநீர் தேவையையும் சமாளிக்க வேண்டியுள்ளது.
இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கீழ்குண்டாறு என்னுமிடத்தில் சிறிய அணை கட்டி புதிய குடிநீர் திட்டம் துவங்க நகராட்சி நிர்வாகம் கோ ரிக்கை விடுத்தது. நகராட்சிக ளின் நிர்வாக ஆணையாள ரால் இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் ரூ.30.44 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டது.
இதன்படி கீழ்குண்டாறில் சிறிய அணை கட்டி 3 இடங்களில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். மேலும் கொடைக்கானல் நகரில் அப்சர்வேட்டரி, குறிஞ்சி ஆண்டவர் கோயில், கூலிகாட் ரோடு, நாயுடுபுரம், செல்லபுரம் ஆகிய 5 இடங்களில் நீர்தேக்க தொட்டி அமைத்து நகர் முழுவதும் குடிநீர் சப்ளை செய்யப்படும். வரும் 2027ம் ஆண்டில் கொடைக்கானல் நகராட்சியில் 47 ஆயிரத்து 300 பேர் இருப்பர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு இத்திட்டத்தில் நாள்தோறும் நபருக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் சப்ளை செய்ய முடியும்.
இத்திட்டம் குறித்து நகர்மன்ற தலைவர் முகமது இப்ராகிம், நகராட்சி பொறியா ளர் ராஜாராம், நகரமைப்பு அலுவலர் பெரியசாமி, பொதுப்பணித்துறை இளநிலைப்பொறியாளர் காஞ்சித் துரை, உதவி வனப்பாதுகாவலர் அன்பழகன், வனச்சரகர்கள் பரமசிவன், முகமது முஸ்தபா, நகராட்சி கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியம், தீனதயாளன், ஆல்பர்ட், ஆரோக்கியராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வறிக்கை நகராட்சி நிர்வாக ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நகராட்சி தலைவர் முகமது இப்ராகிம் கூறு கையில், ‘கொடைக்கானல் நகர மக்களுக்கு 2027ம் ஆண்டு முதல் 2042ம் ஆண்டு வரை பிரச்னையின்றி குடிநீர் வழங்க கீழ்குண்டாறு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படுகிறது. அணை அமைய உள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். அதனால் வனத்துறையின் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் திட்ட பணிகள் துவங்கும்’ என்றார்.