தினமணி 23.07.2010
மாநகராட்சியில் ஓய்வு பெற்ற 309 ஊழியர்களுக்கு ரூ.9 கோடி ஓய்வூதியப் பலன்கள் வழங்கல்
சென்னை மாநகராட்சியில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு
, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்திற்கான ஆணையை வியாழக்கிழமை வழங்குதல்சென்னை, ஜூலை 22: சென்னை மாநகராட்சியில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 309 பேருக்கு ரூ.9 கோடியில் ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் 309 பேருக்கு ரூ.9 கோடியில் ஓய்வூதியப் பலன்களை வழங்கி மேயர் மா.சுப்பிரமணியன் பேசியது:
கடந்த பல ஆண்டுகளாகத் தீர்வு செய்யப்படாமல் இருந்த 267 கோப்புகள் தீர்வு செய்யப்பட்டு, ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,158 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.51 கோடியில் ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2006-ல் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு கருணை அடிப்படையில் 1,211 பேருக்கும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 922 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வந்த 2,446 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
இனி வரும் காலங்களில் சென்னை மாநகராட்சியில் ஓய்வு பெறுபவர்கள், அந்தந்த மாத இறுதியிலேயே ஓய்வூதியப் பலன்களை பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
மாநகராட்சி ஆணையாளர் ராஜேஷ் லக்கானி பேசியது: ஓய்வு பெறும் அலுவலர்கள் தங்களுடைய பணிப் பதிவேட்டில் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை முன்பே ஆராய வேண்டும். பணிப் பதிவேட்டினை சரிசெய்வதன் மூலம் ஓய்வு பெறும் மாதத்திலேயே ஓய்வூதியப் பயன்களை பெற முடியும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆர்.சத்தியபாமா, மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ப.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.